காஷ்மீர் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா ஜிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தில்லியில் இம்மாதம் 21-ம் தேதி காஷ்மீர் குறித்த கருத்தரங்கு நடத்த அனுமதி தந்துவிட்டு, அதில் பேசிய பேச்சுகளைப் பிரசுரிக்கவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் அனுமதித்துவிட்டு அதன் பிறகு பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்.
காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் சுதந்திரம் கேட்கிறார்கள், இதைப் பல்லாண்டுகளாகக் கேட்கிறார்கள். எனவே அவர்களுடைய கோரிக்கை நியாயமானது, இதற்காக அவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும், ஆதரவு தர நான் தயார் என்று பேசியிருக்கிறார் அருந்ததி ராய். பொறுப்பான எழுத்தாளர்களும், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் விளம்பரத்துக்காக தேசநலனுக்கு எதிராகப் பேசுவதும், செயல்படுவதும் சுதந்திரம் என்கிற பெயரில் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டுமா என்கிற கேள்வி நிச்சயம் எழுகிறது.
பிரிவினைவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை என்று பெருமிதப்படுவது தடை செய்யப்பட வேண்டியதும் தண்டனைக்குரியதும் இல்லாவிட்டாலும் தேசவிரோதச் செயல்தான் என்பதை "தினமணி' அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பதிவு செய்ய விரும்புகிறது. "உரிமை' என்கிற பெயரில் தேசியக் கடமையை மறந்துவிட முடியாது. கூடாது.
காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசு ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களது குரல்வளையை நெரிக்கிறது என்கிறவாதம் பாதிதான் உண்மை. காஷ்மீர் மக்கள் நிஜமாகவே பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பவர்களாக இருந்திருந்தால் கடந்த ஜனவரி 2009-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும், தடையையும் மீறி வாக்களிக்கவே வந்திருக்கக்கூடாதே? தேர்தலை அவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கவில்லை என்பதை உலகமே பார்த்து வியந்ததே?
அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேய அரசின் ஆதரவுடன் செயல்பட்டுவந்த அத்தனை சமஸ்தானங்களும், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன. 1947, ஆகஸ்ட் 4-ம் தேதி அன்றைய கவர்னர் ஜெனரல் மௌண்ட் பேட்டன் பிரபு, பாகிஸ்தானிய அதிபர் முகம்மது அலி ஜின்னா, பலுஜிஸ்தான் அரசர் கலாட் கான் ஆகியோர் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தப்படி ஒரே ஒரு விதிவிலக்காக பலுஜிஸ்தான் மட்டும் 1876-ல் இருந்ததுபோல ஒரு சுதந்திர நாடாக இயங்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், 1948 ஜனவரியில் கலாட் கான் கராச்சிக்கு வரவழைக்கப்பட்டு வலுக்கட்டாயமாகப் பாகிஸ்தானுடன் பலுஜிஸ்தானை இணைக்க கையொப்பமிடச் செய்தனர். அன்றுமுதல் இன்றுவரை பலுஜிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைப்பற்றி எந்தவொரு பாகிஸ்தான் எழுத்தாளரும், அரசியல்வாதியும் பேசுவதில்லை. பாகிஸ்தானின் உரிமை மீறல்கள் மன்னிக்கப்படுகின்றனவே, ஏன்?
இந்தியாவுக்கு வருவோம். 1947-ல் வேறு எந்த சமஸ்தானத்துக்கும் இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ தரப்படாத சிறப்பு அந்தஸ்தைக் காஷ்மீருக்கு அளிக்க நாம் வாக்குறுதி அளித்ததன் பேரில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணையச் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாகிஸ்தான் காஷ்மீரைத் தன் வசப்படுத்த சற்றும் எதிர்பாராதவிதமாக ராணுவத்தினரை ஊடுருவச் செய்தபோது இந்தியப் படைகள் அவர்களைப் புறமுதுகிட்டு ஓட விரட்டியது. லடாக், புஞ்ச் பகுதிகளிலிருந்து அவர்களை விரட்டியடித்து முஜபராபாத்தை நெருங்கும்போது, ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிரச்னையை ஐ.நா. சபைக்கு எடுத்துச்சென்று, போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
பண்டித நேருவின் பெருந்தன்மை, அந்த மாமனிதரின் நல்லெண்ணம் இப்போது பாஜகவினரால் விமர்சிக்கப்படும்போது வேதனையாக இருக்கிறது. தனது நல்லெண்ணம் ஒரு தீராப்பழியைத் தேடித்தரும் என்று அந்த ஆசிய ஜோதி நிச்சயம் நினைத்திருக்க மாட்டார். அப்போது மட்டும், பண்டித நேரு ராணுவத்தைத் தடுக்காமல் இருந்திருந்தால் இன்று தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்து ஊடுருவச் செய்ய பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் பகுதியே இருந்திருக்காது. பண்டித நேரு மட்டும், பாகிஸ்தானிலிருந்து அடித்து விரட்டப்பட்ட சிந்திகளையும், பஞ்சாபிகளையும் காஷ்மீரில் குடியேற்றி இருந்தால் இன்று "காஷ்மீரியாட்' பற்றி யாரும் பேசியே இருக்க முடியாது.
பண்டித நேரு என்ன இலங்கை அதிபர் ராஜபட்சவா, சிறுநரித்தனமாகச் செயல்பட? கடந்த 63 ஆண்டுகளில் காஷ்மீர் இனத்தின் தனித்தன்மையைக் குலைக்க இந்தியா எப்போதாவது, ஏதாவது முயற்சி செய்திருக்கிறதா? இலங்கையில் தமிழர்கள் எல்லா உரிமையும் மறுக்கப்பட்டு, சொந்தமண்ணில் அகதிகளாக வாழ்வதுபோல ஒரு நிலைமையை இந்தியா காஷ்மீரத்தில் உருவாக்கி இருக்கிறதா? காஷ்மீர் மக்களின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, செய்யத் தொழில், கல்வி இவையெல்லாம் மறுக்கப்பட்டு இலங்கையில் ஈழத்துக்குப் பொருளாதாரத் தடை விதித்ததுபோல நாம் நடந்து கொண்டதுண்டா?
பிரிவினைவாதம் என்பது பெருவாரியானவர்களின் கோரிக்கை அல்ல. பஞ்சாபில் "காலிஸ்தான்' கேட்டபோது அதை இன்னொரு காஷ்மீர் என்று வர்ணித்தார்களே, இப்போது பஞ்சாபில் பிரிவினைவாதம் எங்கே போயிற்று? ஒருசில கலகக்காரர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடும்போது, பெருவாரியான பொதுஜனம் தங்களுக்கு ஏன் வம்பு என்று இருப்பது இயல்பு. நான்கு பேர் வன்முறையில் ஈடுபடும்போது நானூறு பேர் அவர்களுடன் இணைவதும் இயல்பு. இதற்குப் பயந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஓடிவிட முடியாது. அடக்கத்தான் வேண்டும்.
காஷ்மீரில் தனிநாடு கேட்கிறார்கள் என்று காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கேட்கிறார்கள் என்று அந்த மாநிலங்கள் பிரிந்து போகட்டும் என்று நாம் விட்டுவிட்டால், மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரேயும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவும், ஏன், வன்னிய நாடு கோரிக்கையுடன் நமது டாக்டர் ராமதாசும்கூடத்தான் தனிநாடு கேட்பார்கள். எல்லா மாநிலங்களையும் தனி நாடுகளாக்கிவிட்டு நாமும் ஓர் ஆப்பிரிக்கா ஆகிவிடப் போகிறோமா?
இந்தியாவைப் பொறுத்தவரை, நமது பிரச்னைகள் அனைத்தும் மாநிலப் பிரச்னைகள். ஆனால், இதற்கான தீர்வுகள் தேசியத் தீர்வுகள். 2020-ல் உலக வல்லரசு என்று நாம் காணும் கனவு நனவாக வேண்டுமானால் இந்தியா ஒரு யூனியனாக ஒன்றுபட்டு இருந்தாக வேண்டும். இதில் பிரச்னைகள் இருக்கலாம். தவறுகள் இருக்கலாம். அவை சரிசெய்யப்பட வேண்டுமே தவிர, பிரிவினை அல்ல தீர்வு. மனித உரிமை மீறல் காஷ்மீரில் இல்லையா? இருக்கிறது. அதைவிட அதிகமான மனித உரிமை மீறல் இலங்கையில் தமிழர்கள்மீது தொடுக்கப்படுகிறது. பலுஜிஸ்தானில் கொடூரமான அடக்குமுறையும் மனித உரிமை மீறலும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அருந்ததி ராய்கள் அங்கே போய் ஏன் பேசுவதில்லை? காரணம், இங்கே சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது. அதற்காக வாய்க்கு வந்ததைப் பேசி விடுவதா?
காஷ்மீரைப் பிரச்னையாக்கி இந்தியாவிலிருந்து பிரித்து மேற்கு நாடுகளின் ராணுவத் தளமாக்க வேண்டும் என்கிற முயற்சியின் ஒரு பகுதிதான், பாகிஸ்தானைத் தூண்டிவிட்டு, பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கமளிப்பது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் துடிக்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எந்தவித உதவியும் செய்யத் தயாராக இருக்கிறது. இலங்கையைத் தனது நட்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிட்ட சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி, காஷ்மீரில் குழப்பம் விளைவிக்கத் தூண்டுகிறது.
முதல்வர் ஒமர் அப்துல்லாவும், எதிர்க்கட்சித் தலைவி மெகபூபா முஃப்தியும் தங்களைப் பிரிவினைவாதிகளாகக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். போதாக்குறைக்கு, தீவிரவாதத் தலைவர்களும் அவர்களை ஆதரித்து விளம்பரம் தேடிக்கொள்ள முயலும் அருந்ததி ராய்களும்... இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்திய சக்திகளுக்குத் துணைபோகத் துடிக்கிறார்களே என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத, பிரிக்கப்படக் கூடாத பகுதி. இதில் எந்தவித சமரசமும் ஏற்புடையதல்ல. சுயவிளம்பரத்துக்காக தேசநலனைக் கைகழுவும் போக்கும்தான்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக