மோட்டார் சைக்கிளில் வந்த மீனவரை நடுரோட்டில் ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவத்தால் கடலூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மீனவ கிராமமான தேவனாம்பட்டினத்தில் வசிக்கும் மீனவர் வரதன் என்பவரின் மகன் மாரியப்பன் (40). மீனவர் விடுதலை வேங்கை அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலளர் ஆவார். இவர் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது இவர் நேற்று மதியம் அமுது என்கிற ஆராவமுதன், நாகராஜன், புதுச்சேரி தேவா ஆகியோருடன், புதுச்சேரிக்குச் சென்று தீபாவளி பண்டிகைக்கு துணி எடுத்துக் கொண்டு, இரண்டு மோட்டார் சைக்கிளில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகே வந்தபோது, பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மாரியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தற்செயலாக நடந்ததாக கருதிய மாரியப்பன் அதை பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளை ஓட்ட முயன்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த தேவனாம்பட்டினம் ஞானசேகரன், முன்னால் சென்ற மாரியப்பன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த அமுது என்கிற ஆராவமுதனை பிடித்து இழுத்தார்.
இதனால் நிலை தடுமாறி, மாரியப்பனும், அமுதுவும் கீழே விழுந்தனர். உடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஞானசேகரன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல், கீழே விழுந்த மாரியப்பனை சுற்றி வளைத்து, தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதைக் கண்டு பயந்துபோன அமுது, அங்கிருந்து தப்பியோடி கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவலறிந்ததும் உடனடியாக கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை, ஏட்டு சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரியப்பனை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்
மாரியப்பன் படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர், தேவனாம்பட்டினம் பகுதியில் பதட்டம் நிலவி வருவதைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்கு பதிந்து, ஆறு பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக