வியாழன், 21 அக்டோபர், 2010

நான் முஸ்லீம் இல்லை - பொற்கோயில் தரிசனத்தை தவிர்க்கும் ஒபாமா!

வாஷிங்டன் : அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா தன் மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் செல்ல வேண்டிய இடங்களில் பஞ்சாபில் சீக்கியர்களின் புனித ஸ்தலமாகிய பொற்கோயிலும் இருந்தது. ஆனால் அப்படி சென்றால் தன்னை முஸ்லீம் என்று சொல்லி விடுவார்கள் என்பதால் அவரின் பயண திட்டத்தில் இருந்து பொற்கோயில் நீக்கப்பட்டுள்ளது.

பொற்கோயிலுக்கு செல்லும் நபர்கள் சீக்கியர்கள் வழமையாக தலையை மறைக்க அணியும் துணியை அணிய வேண்டும். ஏற்கனவே அமெரிக்காவில் ஒபாமா ஒரு முஸ்லீம் என்று எதிரணியினர் பிரச்சாரம் செய்வது ஒபாமாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் முஸ்லீம்களை போல் தலையை மறைத்து கொண்டு போனால் மீடியாக்கள் அப்படத்தை போட்டு தாம் முஸ்லீம் என பிரச்சாரம் செய்து விடும் என்று ஒபாமா நினைப்பதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்காவில் முஸ்லீம்கள் என்று நினைத்து சீக்கியர்கள் மேல் தாக்குதல் நடந்ததும் அரிசோனா மாநிலத்தில் ஒரு சீக்கிய கார் பழுது பார்க்கும் நிலைய அதிபர் தவறுதலாக துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்த பொற்கோயில் டிரஸ்டி குருபச்சன் சிங் ஒபாமா வெறும் தொப்பி அணிந்து கொண்டு வந்தாலும் அனுமதிப்போம் என்றார். இந்திய அரசாங்க உயரதிகாரி ஒருவர் இது குறித்து கூறும் போது ஒபாமா எங்கு செல்ல வேண்டியது என்பதை முடிவு செய்ய வேண்டியது தங்கள் வேலை அல்ல என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: