அயோத்தியில் அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ராமர் சிலைக்கே அளிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார். உயர்நீதி மன்றம் முக்கியமான இடத்தை ராமனுக்கு அளித்ததன் மூலம் அந்த இடம் முழுமையும் ராமர் சிலைக்கே வழங்கப்படவேண்டும் என அவர் கூறியுள்ளார். சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலத்தில் எந்த இடத்தையும் யாருக்கும் அளிக்க முடியாது என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் அந்த இடங்களில் மசூதி கட்ட அனுமதிக்க முடியாது எனக் கூறிய அவர் , முஸ்லிம்கள் விருப்பப்பட்டால் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு வெளியில் கட்டிக்கொள்ளலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். அலஹாபாத் உயர்நீதி மன்ற தீர்ப்பை விவாதிப்பதற்காக நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய கமிட்டி கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சிங்கால் சந்தித்தார்.
நிலத்தை ராமஜன்மபூமி நியாஸிடம் வழங்கக் கோரி பிரதமரை ஹிந்து மத துறவிகள் விரைவில் சந்திப்பார்கள் என அவர் குறிப்பிட்டார். பகவான் ராமன் சார்பாக அலஹாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்தார். முஸ்லிம்கள் தங்களுக்கு நிலத்தில் எந்த வித உரிமையுமில்லை எனக் கூறும் வரையில் எந்த சமாதானமும் ஏற்படும் வாய்ப்பில்லை என சிங்கால் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக