மதுரை: மலேசியா சென்ற சினிமா பைனான்சியர் முத்துராஜா என்ன ஆனார் என்பதை 2 வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ராமலட்சுமி (வயது 36), மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், "எனது கணவர் முத்துராஜா கடந்த ஜனவரி மாதம் மலேசியா செல்வதாக கூறி விட்டுச் சென்றார். அதன்பின்பு அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
இந்த நிலையில் எனது கணவர் மலேசிய வக்கீல் சகோதரர்களால் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. எனது கணவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்பது தெரியவில்லை. எனவே எனது கணவரை கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்..." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா, அருணாஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணையின்போது சினிமா பைனான்சியர் முத்துராஜாவின் நிலை குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக