புதன், 27 அக்டோபர், 2010

தமிழைப் பாதுகாக்கும் காவல் நிலையங்கள் !

கோவை, திருப்பூர் ஆகிய மாநகரங்களை உள்ளடக்கிய தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் காவல்துறை பொது ஆய்வுத் தலைவராக (ஐ.ஜி) சிவனாண்டி பதவி வகித்து வருகிறார். இவர் தம் அதிகார எல்லைக்குட்பட்ட காவல்துறையினருக்கு "கூடுமானவரை பிறமொழி தவிர்த்து அழகிய தமிழிலேயே பேசுங்கள்" என்று பரிந்துரை செய்துள்ளார்.


தன்னுடைய அதிகாரியின் வழியில் செல்ல நினைக்கும் திருப்பூர் துணண கண்காணிப்பாளர் (எஸ்.பி) அருணும் அதையே வேண்டுகோளாய்ச் சொல்லிவைக்க, கொங்குமண்டல காவல் நிலையங்களில் தமிழ் மணக்கிறது. இதைத் தொடர்ந்து, இங்கு கட்டுப்பாட்டு அறை முதல் காவல்துறை, சிறைத்துறை வரை நல்ல தமிழில் பேச்சு நடக்கிறது. இதனால் நேற்றுவரை கோலோச்சிய ஆங்கிலம் இன்று கட்டுப்பட்டு கிடக்கிறது.
90 விழுக்காடு ஆங்கிலச் சொற்களே ஓங்கிநின்ற ஒரு துறையில் இன்று ".......காவல் நிலையம், தொடர்பு கொள்ளுங்கள்... கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசுகிறோம்.... கண்காணிப்பாளர் உத்தரவு, துணை கண்காணிப்பாளர் அழைக்கிறார். அலைபேசியில், ஆய்வாளரை தொடர்பு கொள்ளுங்கள்; விபரத்தை முழுமையாக தெரிந்து கொண்டீர்களா, இத்தகவலை உடனடியாக தங்கள் உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது,' என்பது போன்ற உரையாடல்களில் தமிழ் மீட்டெடுக்கப்படுகிறது.
இதுபற்றி குறிப்பிடுகையில்
"தூய தமிழில் பேசுவது இனிமையாக உள்ளது; ஒருவர் தூய தமிழில் பேசும்போது, எதிரில் பதில் அளிப்பவரும் எளிதில் தூய தமிழுக்கு மாறி விடுகிறார். ஆங்கிலத்தில் மிக பரிச்சயமான வார்த்தைகளை, தமிழில் பேசுவது சிரமம் என்றாலும், நாளடைவில் இது பழக்கமாகி விடும்,'  என்கின்றனர் சில காவல் அதிகாரிகள்.
தூய தமிழில் பேசுவதை உத்தரவாக இல்லாமல், இயன்றவரை பேச முயற்சியுங்கள் என்று மட்டுமே சொன்னதாக து.க. அருண் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: