சதாம் ஹுசைன் ஈராக்கை ஆட்சி செய்த காலத்தில் ஈராக்கின் வெளியுறவு அமைச்சராகவும், ஈராக்கின் துணைப் பிரதமராகவும் பதவி வகித்து வந்த தாரிக் அஜீசுக்கு ஈராக்கிய நீதிமன்றம் ஒன்று தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சதாம் ஹுசைன் மேற்கத்திய நாடுகளுடனான உறவைப் பேணுவதற்கு தாரிக் அஜீஸ் மிகவும் உதவியாக இருந்தார். சதாம் ஹுசைன் அமைச்சரவையிலும், அவருக்கு மிக நெருங்கிய வட்டத்திலும் இருந்த முஸ்லிமல்லாதவர் இவர் ஒருவரே.
ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பின், 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கப் படையினரிடம் தாரிக் அஜீஸ் சரண் அடைந்தார். மத அடிப்படையிலான அமைப்புகளின் மீது கொடும் அடக்குமுறையைப் பயன்படுத்தியதாக அவர் மீது நடந்த விசாரணை முடிவிலேயே தூக்கு வழங்கப்பட்டு உள்ளது. வேறொரு வழக்கில் சென்ற ஆண்டில் 42 ஈராக்கிய வணிகர்களைக் கொன்ற வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக