ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடுகள் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான தாமதத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
செல்போன் சேவைக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை 2ஜி ஒதுக்கீட்டில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், மத்திய அரசு க்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக பல தரப்பிலும் புகார் கூறப்பட்டு வருகிறது. துறைக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் ஆ ராசாவின் பெயர் இதில் பலமாக அடிபடுகிறது.
இது தொடர்பாக, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்து வருகிறது. கடந்த 21-ந் தேதி அன்று விசாரணை நடந்தபோது, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், "ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என கூறப்பட்டது. இதையடுத்து, இந்த முறைகேடு குறித்து விளக்கம் அளிக்குமாறு தொலை தொடர்பு துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சி.பி.ஐ.யிடம் விசாரணை அறிக்கை கேட்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கு குறித்து விசாரிக்க கால அவகாசம் தேவை என நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, சி.பி.ஐ. சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் ஆஜரானார்.
நீதிபதிகள் கோபம்!
அவர், 'மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. மிகவும் சிக்கலாகவும் பெரிய அளவிலும் ஆவணங்கள் இருப்பதால் விசாரணையை முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவை' என தெரிவித்தார்.
இதனால், நீதிபதிகள் கடுமையாக கோபம் அடைந்தனர். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. மெத்தனமாக செயல்படுவது குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
இன்னும் 10 ஆண்டுகள் தேவையா?
நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கில், நீங்கள் (சி.பி.ஐ.) இதுவரை ஏதாவது செய்திருக்கிறீர்களா? இது தான் அரசு செயல்படும் லட்சணமா? இதே நிலைப்பாட்டை மற்ற வழக்குகளிலும் நீங்கள் மேற்கொள்வீர்களா? ஏற்கனவே, ஒரு ஆண்டு முடிந்து விட்டது நினைவிருக்கிறதா?," என்றனர்.
உடனே, ராவல், டதகுந்த, திறமையான மூத்த அதிகாரிகளைக் கொண்டு அனைத்து விதமான வழிமுறைகளிலும் விசாரணையை நடத்த வேண்டி இருக்கிறது. எனவே, கால அவகாசம் தேவை" என்றார்.
இதையடுத்து, "அப்படி என்றால், இந்த வழக்கு விசாரணையை முடிப்பதற்கு இன்னும் 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வீர்களா?" என நீதிபதிகள் கேட்டனர்.
ஆறு மாதங்களுக்குள் சி.பி.ஐ. விசாரணையை முடித்து விடுவதாக ராவல் பதிலளித்தார்.
விசாரணை ஒத்திவைப்பு
ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ஆஜராகவில்லை. எனவே, வழக்கு விசாரணையை நவம்பர் 15-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
மேலும், அந்த விசாரணையின்போது கோபால் சுப்பிரமணியம் ஆஜராக வேண்டும் என்றும் அவரிடம் சில கேள்விகளுக்கு பதில்களை பெற வேண்டியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
1 கருத்து:
நம் நாட்டில் poor and rich gap மிகப்பெரியதாக இருக்கு இதனால் நாட்டில் பெரியகுழப்பங்கள் ஏற்படுகின்றன இதற்கு அரசியல்வாதிகள் தான் காரணம் லஞ்சம் வாங்கிக்கொண்டு முதலாளிகளுக்கு உதவி அவர்களை கோட்டேஸ்வர்கலகுவ்து அவைகள் தாம், மேலும் அரசியல்வாதிகளும் கோடேஸ்வர்ரகளாக ஆகின்றனர். இது எல்லாமே மக்கள் போடும் பிச்சை, பிச்சைகாரர்கள் (அரசியல்வாதிகள்)வாழ்கவளமுடன் சாதாரணமக்கள் மடித்துபோகட்டும் . உங்களுக்கு தெரியுமா இந்திய மிகசிறந்த ஜனநாயகநாடு .
கருத்துரையிடுக