சென்னை: காவிரிப் பிரச்னை தொடர்பாக இரு மாநில உறவு பாதிக்கும் வகையில் கர்நாடக அமைச்சர் பேட்டியளிக்கும்போது, தமிழக முதல்வர் கருணாநிதி மட்டும் பயப்படுவது ஏன் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:
"காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "பத்திரிகைகளிலே வரும் செய்திகளை வைத்துக் கொண்டு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகைகளிலே வரும் செய்திகளினால் – நான் சொல்கிற பதில்களினால் – இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு நான் இடம் தர விரும்பவில்லை" என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்திருக்கிறார்.
கர்நாடக மாநில அமைச்சர், இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு பாதிக்கும் அளவில் துணிந்து பேட்டி அளிக்கும் போது, கருணாநிதி மட்டும் ஏன் பயப்படுகிறார்?
காவிரிப் பிரச்சினை என்பது தமிழகத்தின் உயிர்நாடி. இது குறித்த நிகழ்வுகளை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து, அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர், "நீங்கள் சொல்கிற செய்திகளையெல்லாம் நான் பத்திரிகைகளிலே பார்க்கவில்லை; பார்த்த பிறகு சொல்கிறேன்" என்று கூறியிருப்பது சரியல்ல.
காவிரியில் உரிய அளவு நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் தமிழகத்தில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பா சாகுபடியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போய்விடும்.
எனவே, தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக எடுக்க வேண்டும்..."
-இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக