புதன், 27 அக்டோபர், 2010

ஒபாமா வருவதால் அருந்ததிராயை கைது செய்ய மத்திய அரசு தயக்கம் !

ஒபாமா வருவதால் அருந்ததிராயை கைது செய்ய மத்திய அரசு தயக்கம்
காஷ்மீர் இந்திய பகுதி அல்ல என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் சமீபத்தில் கருத்து கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் சில அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி ப. சிதம்பரம் இதுபற்றி விசாரணை நடத்த டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசு தற்போது தயக்கம் காட்டி வருகிறது. அருந்ததிராயை கைது செய்தால் அதனால் காஷ்மீரில் பிரச்சினைகள் உருவாகலாம். நாட்டிலேயும் எதிர்ப்புகள் கிளம்பலாம்.
அமெரிக்க அதிபர் ஒபாமா 6-ந்தேதி இந்தியா வருகிறார். இந்த நேரத்தில் நாட்டில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது. எனவேதான் அருந்ததிராயை கைது செய்வதில் தயக்கம் காட்டி வருகிறது.
அருந்ததிராய் உலகம் முழுவதும் தெரிந்த எழுத்தாளர். சமூக ஆர்வலர். அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். அப்படிப்பட்டவரை அவர் கூறிய கருத்துக்காக கைது செய்தால் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இந்தியா இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். இதனாலும் மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் காஷ்மீர் இந்திய பகுதி அல்ல என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதற்காக அவர்களை இதுவரை கைது செய்யவில்லை. அருந்ததிராயை மட்டும் கைது செய்தால் இது வேறு மாதிரி திசை திரும்பி விடக்கூடாது என்றும் நினைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: