அஜ்மீர் தர்காவில் வெடிக்காத குண்டின் மூலம் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் நடத்திய புலனாய்வில்தான் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பங்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆனால், அதற்கு முன்பே மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹேமந்த் கர்காரேயின் புலனாய்வு அறிக்கையில் இக்குற்றவாளிகளைக் குறித்து குறிப்பு வழங்கப்பட்டிருந்தது.
2007 ஆம் ஆண்டு நோன்பு திறப்பதற்கு 2 நிமிடங்கள் மீதமிருக்கும் வேளையில்தான் அஜ்மீர் தர்காவில் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டு 15 பேருக்கு காயமேற்பட்டது.
இரண்டு வெடிக்குண்டுகள் வைத்திருந்த பொழுதிலும் ஒரு குண்டுதான் வெடித்தது. முதல் குண்டு வெடித்தவுடன் பொதுமக்கள் பதட்டத்துடன் அங்குமிங்கும் ஓடும்வேளையில் இரண்டாவது குண்டுவெடிப்பதற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாவது குண்டு வெடிக்கவில்லை. வெடித்த மற்றும் வெடிக்காத குண்டுகளுக்கு ட்ரிகராக பயன்படுத்திய சிம்கார்டுகளை சுற்றித்தான் புலனாய்வு நடந்தது.
2007 ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் இதே ரீதியில்தான் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வெடிக்காத குண்டுடன் இணைக்கப்பட்டிருந்த மொபைல் ஃபோனின் ஸ்க்ரீன்ஸேவரில் 'வந்தே மாதரம்' என்று எழுதப்பட்டிருந்ததாக ஃபாரன்சிக் பரிசோதனையில் தெளிவானது.
2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி ஜார்கண்ட்-பீகார் ரேஞ்சில் வைத்து ஆக்டிவேட் செய்யப்பட்டதுதான் இந்த ஏர்டெல் சிம்கார்டு என்பது விசாரணையில் தெளிவானது.
மொபைல் கேர் என்ற ஜார்கண்ட் மாநிலத்திலிலுள்ள கடையிலிருந்து வெடித்த குண்டின் சிம்கார்டு வாங்கப்பட்டுள்ளது. அந்த சிம்கார்டை வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ். வெடிக்காத குண்டின் சிம்கார்டு மேற்கு வங்காளத்தில் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த வோடாஃபோன் சிம்கார்டை பாபுலால் யாதவின் மகன் மனோகர் யாதவின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பெயர்களெல்லாம் போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிம்கார்டுகளை வாங்குவதற்கு 28289892 என்ற மேற்குவங்காள ஓட்டுநர் உரிம நகலும் ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி இவ்வகையில் 11 சிம்கார்டுகள் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சிம்கார்டுகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணை யோகாக் குறித்து பத்திரிகையில் எழுதிவரும் கரக்நாத் என்பவரை நோக்கிச் சென்றது. ஆனால், ஆவணங்கள் போலி என்பது தெளிவானது. இந்த போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட 11 சிம் கார்டுகளில் 2 ஐ பயன்படுத்தித்தான் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்பது தெரியவந்தவுடன் விசாரணை சரியான திசையை நோக்கி பயணிப்பதாக உணர முடிந்தது.
ஜாம்தாரா, மிஹிஜாம் ஆகிய இடங்களின் முகவரிதான் இந்த போலி அடையாள அட்டைகளில் இடம்பெற்றிருந்தன. ஆர்.எஸ்.எஸ்ஸின் மாவட்ட பிரச்சாரக்கும் இவ்வழக்கின் குற்றவாளியுமான தேவேந்திர குப்தா பணியாற்றிய பகுதிகள் இவ்விடங்கள். இதர சிம்கார்டுகள் மற்றும் மொபைல் ஃபோன்கள் குறித்த விசாரணை மத்தியபிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களான சந்திரசேகர் லேவ், ரவீந்திர படிதார், சந்தோஷ் படிதார் ஆகியோரை நோக்கி திரும்பியது.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளியான டாங்கே அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளுக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள 4 மொபைல் ஃபோன்களை சந்திரசேகரிடம் அளிக்க ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான கோவர்தன் சிங்கிடம் ஒப்படைத்தார். ஆனால், கோவர்தன் ஒரு மொபைல் ஃபோனை தனக்காக எடுத்துவிட்டு மீதமுள்ள 3 மொபைல் ஃபோன்களை தனது உறவினரான விஷ்ணு படிதார் என்பவரிடம் கொடுத்துள்ளார். இவர் மூலமாகத்தான் ரவீந்திர படிதார், சந்தோஷ் படிதார் ஆகியோருக்கு மொபைல் ஃபோன் கிடைக்கிறது. ஒரு ஃபோன் வேலைச் செய்யாததால் அதனை உடைத்துள்ளார் விஷ்ணு படிதார். டாங்கேயின் குண்டுவெடிப்புத் தொடர்பை புலனாய்வுக்குழு கண்டறிந்த பிறகு இதர குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்துள்ளனர்.
செய்தி:தேஜஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக