கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட கொடூரத்தின் பின்னணி, கிரைம் நாவலையும் மிஞ்சுகிறது. "இப்படியும் கொடூரர்கள் இருப்பார்களா?' என்ற கேள்வி, மக்கள் மனதை கொந்தளிக்க செய்திருக்கிறது. படுபாதக கொலைச்சம்பவம் எப்படி நடந்திருக்கும், கொலையாளிகளிடம் சிக்கி பிள்ளைகள் என்னபாடு பட்டிருப்பார்கள், போலீசாரால் உயிருடன் மீட்க முடியாமல் போனதெப்படி என்ற, ஆதங்க கேள்விகள் ஆயுதமாகி இதயத்தை துளைக்கின்றன.
இதற்கான பதில்கள், கொடூரத்தை அரங்கேற்றிய அரக்க கொலையாளிகளான அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த மோகன்ராஜ்(33), மனோகரன்(23) அளித்துள்ள வாக்குமூலத்தில் அங்குலம், அங்குலமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் ஒருகட்டத்தில் கண்கலங்கிவிட்டனர். அந்த அளவுக்கு நடந்திருக்கிறது, குழந்தைகளின் உயிர்பறிப்பு. கோவை நகரில் கடத்தப்பட்டதில் இருந்து, போலீசாரிடம் கொலையாளிகள் பிடிபட்டது வரை 250 கி.மீ., பயணித்திருக்கிறது, அரக்கர்களின் ஆம்னி வேன்.
குழந்தைகள், பள்ளிக்கு கிளம்பியது முதல் பலியானது வரை தொடர்ந்த திக்...திக்...திக்..., சம்பவம் இதோ:(கொலையாளிகள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் மற்றும் விசாரணையில் தெரியவந்த தகவல்கள்)கடந்த 29ம் தேதி, காலை 7.50 மணி. கோவை நகரிலுள்ள காத்தான்செட்டி சந்தில் வசிக்கும் துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமாரின் மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் முதுகில் புத்தக மூட்டை, கையில் "லஞ்ச் பேக்' சகிதமாக தனியார் பள்ளிக்கு கிளம்பினர். தாயாரும், பாட்டியும் வழியனுப்பி வைக்க தெருவில் காத்திருந்தனர், வழக்கமாக அழைத்துச் செல்ல வரும் ஆம்னி வேனுக்காக; ஆனால், வந்ததோ கொலைகார வேன். இதையறியாத குழந்தைகள், பள்ளிக்குப் போகும் ஆவலுடன் தாவி ஏறி சீட்டில் அமர்ந்தனர். வேனை ஓட்டிவந்த மோகன்ராஜ், தனது கொடூர முகத்தை மறைத்து, புன்னகை பூத்து நடித்தான். கிளம்பிய வேன், பள்ளி நோக்கிச் செல்லாமல் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் பறந்தது. "அங்கிள், ஏன் இப்படி போறீங்க... ஸ்கூலுக்கு தானே போகணும்?' என, அப்பாவி மாணவி முஸ்கன் கேட்க, "அதுவா, இன்னைக்கு ஸ்கூல் லீவு... அதனால டூர் போயிட்டு வரலாம்...' என்றானாம் கொடூரன். வீட்டுக்கு போகணும் என, குழந்தைகள் அடம்பிடித்தும் அவன் கேட்கவில்லை. இருவரும் அழுதபடியே வேனில் பயணிக்க... அடுத்த 45வது நிமிடத்தில் வேன் பொள்ளாச்சியை அடைந்து, வால்பாறை ரோட்டில் அசுர வேகத்தில் பறந்தது.
அந்நேரத்தில், தங்களது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல், ஆம்னி வேனில் காணாமல் போனதையறிந்த வீட்டார் பதபதைத்து போய், உறவினர்களின் உதவியுடன் அங்குமிங்குமாக தேடத்துவங்கினர். எங்கும் காணாததை அடுத்து காலை 10.45 மணிக்கு போலீசின் உதவியை நாடினர். மாநகர போலீஸ் நுண்ணறிவுப்பிரிவு மூலமாக தகவல் அறிந்த கமிஷனர் சைலேந்திரபாபு, கடத்தல் வேனை கண்டுபிடித்து குழந்தைகளை மீட்க வாகன சோதனையில் ஈடுபடுமாறு மாநகர போலீசுக்கு உத்தரவிட்டார்; இந்த உத்தரவு கோவை ரூரல் போலீசுக்கும் போகிறது. அதன் பின், துவங்கிய வாகன சோதனையால் பயனொன்றுமில்லை.கடத்தல் வேனை சாலையில் சல்லடை போட்டு போலீசார் தேடிக்கொண்டிருந்த வேளையில், அவ்வேன் பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டிலுள்ள அங்கலக்குறிச்சிக்குள் நுழைந்தது.
இரு குழந்தைகளுடன் அங்குள்ள ஒரு வீட்டு முன் வேனை நிறுத்திய மோகன்ராஜ், வீட்டு முன் நின்றிருந்த மூதாட்டியிடம், "மனோகரன் இருக் கிறானா' என விசாரிக்க, "இல்லை' என பதில் வந்ததது; வேனை மீண்டும் கிளப்பிச் சென்று சற்று தொலைவில் நிறுத்திய மோகன்ராஜ், போனில் பேசி மனோகரனையும் வரவழைத்தான். அவன் வந்து வேனில் ஏறியதும் மீண்டும் கிளம்பி, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நின்றது. மாணவி முஸ்கனிடம், அவரது தந்தை ரஞ்சித்குமாரின் மொபைல்போன் நம்பரை கேட்டு பெற்ற கடத்தல் ஆசாமிகள், போனில் பேசி பணம் பறிக்க திட்டமிடுகின்றனர்...இவர்களது திட்டத்தை எதிர்பார்த்த மாநகர போலீசாரும், போனில் பேசினால் "பேச்சு நடத்த' தயாராக, குழந்தைகளின் வீட்டு "லேண்ட் லைன்' இணைப்பில் "காலர் ஐ.டி.,' (அழைப்பவரின் போன் எண்களை காட்டும் சாதனம்) பொருத்தி தயாராக இருந்தனர். அ
திரடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட உதவிக்கமிஷனர் குமாரசாமி தலைமையில் 8 தனிப்படை போலீசாரும் துப்பாக்கி சகிதமாக தயார் நிலையில் இருந்தனர்; ஆனால், போன் ஏதும் வரவில்லை. அங்கே... திடீரென, பணம் பறிப்பு திட்டத்தை மாற்றிய மோகன்ராஜ், மனோகரன் இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யும் திட்டத்தை துவக்கினர். முஸ்கன், ரித்திக்கின் கை, கால்களை கயிற்றால் கட்டினர். ரித்திக்கை, வேனின் பின் இருக்கையில் தள்ளிவிட்டனர். கண்ணாடிகள் மூடப்பட்ட வேனுக்குள் இருந்த இவர்களின் கூச்சல் வெளியில் கேட்கவில்லை. அடி, உதைக்கு பின் வாயடைத்து மவுனமாயினர். முஸ்கனை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சி பலிக்காமல் போனதால், இருவரையும் கொலை செய்யும் முயற்சியாக "பாலிதீன் கவரால்' முகத்தை மூடி மூச்சடைக்கச் செய்தனர்; குழந்தைகளின் உயிர்போராட்டம், இவர்களது கொடூர முயற்சியை தோற்கடித்தது.
இச்சம்பவம், ஆனைமலை - பழனி ரோட்டில் அரங்கேறியது.கடத்தி வெகுநேரமாகிவிட்டதால் போலீசார் நம்மை பிடித்துவிடுவார்கள் என பயந்து போன கொடூரரர்கள், குழந்தைகள் இருவரையும் மலையில் இருந்து பள்ளத்தில் தள்ளி கொலை செய்ய திட்டமிட்டனர்; வாகனங்கள் சென்று வந்ததால் அந்த திட்டமும் எடுபடவில்லை. இதையடுத்து, உடுமலை அருகே சர்க்கார்புதூரிலுள்ள தீவாலப்பட்டியை நோக்கி கொலைகாரர்களின் வேன் பறந்தது. வழியில் வேனை நிறுத்திய கொலைகாரர்கள், சாணிப்பவுடரை பாலில் கலந்து கொடுத்து குழந்தைகளை கொல்ல முயன்றனர். குடிக்க மறுத்து குழந்தைகள் காட்டிய எதிர்ப்பால், மூன்றாவது முயற்சியும் பலிக்கவில்லை; அப்போது, காலை 10.00 மணி. கொலைகாரர்களுக்கு போலீஸ் பயம் அதிகரித்தது. அடுத்த சில நிமிடங்களில் வேன் பறந்து தீவாலப்பட்டியை அடைந்தது. ஊருக்குள் இருந்து 20 கி.மீ., தொலைவிலுள்ள பி.ஏ.பி., வாய்க்கால் கரையில் நின்றது.இரு குழந்தைகளின் கை கட்டுகளையும் அவித்துவிட்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸ்களை திறந்தனர்.
"சாப்பிடுங்கள், சாப்பிட்டு முடிந்ததும் உங்கள் வீட்டுக்கே திரும்பி அழைத்துச் செல்கிறோம்...' எனக்கூற, குழந்தைகள் சாப்பிட மறுத்தனர். மிரட்டி ஒரிரு சப்பாத்திகளை சாப்பிட வைத்த பின், முஸ்கனை அடித்து, உதைத்து தங்களது "எண்ணத்தை' நிறைவேற்றிக்கொண்டனர். அரக்கர்களிடம் சிக்கிய குழந்தைகள் இருவரும் குற்றுயிரும், குலையுயிருமாக கிடக்க, இருவரையும் மிரட்டி எழுப்பி வாய்க்காலில் கைகழுவுமாறு மிரட்டியுள்ளனர். பயந்துபோன குழந்தைகள், பல அடி ஆழத்துடன் தண்ணீர் கரைபுரண்டோடும் வாய்க்கால் கரையோரத்தில் அமர்ந்து, ஓடிய தண்ணீரில் கைகழுவினர்; அடுத்த விநாடிகளில் நடக்கப்போகும் ஆபத்தை அறியாதவர்களாய்...இருவரையும், முதுகு பக்கமிருந்து தண்ணீரில் தள்ளிவிட்ட கொலை பாதகர்கள், நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தைகளை வெகுநேரம் பார்த்திருந்து, உயிர்போனதை உறுதி செய்தபின் அங்கிருந்து கிளம்பினர். கிளம்பும் போது, குழந்தைகளின் ஸ்கூல் பேக்குகளை அதே இடத்தில் வீசிச் சென்றனர்; அப்போது, காலை 11.30 மணி."எல்லாம் முடிந்தும்', எதுவும் தெரியாத நிலையில், குழந்தைகளை மாலைவரை தேடிக்கொண்டிருந்தனர், மாநகர போலீசார்.
மாலை 5.00 மணியளவில்தான், கடத்தல்காரன் மோகன்ராஜின் மொபைல் போன் நம்பரை ஒருவழியாக கண்டுபிடித்த போலீசார், "டவர் லொகேஷன்' பார்த்து, உடுமலை அருகிலுள்ள தளி பகுதியை முற்றுகையிட்டனர். "எப்படியும் குழந்தைகளை உயிருடன் மீட்டுவிடலாம்...' என்ற நம்பிக்கையுடன் இருந்த போலீசாருக்கு, தீவாலப்பட்டியிலுள்ள பி.ஏ.பி., வாய்க்கால் அருகே குழந்தைகளின் ஸ்கூல் பேக் கிடப்பதாக தகவல் கிடைத்து "அப்செட்' ஆகினர். இரு குழந்தைகளையும் வாய்க்காலில் தள்ளி கொன்றிருப்பார்களோ? என்ற சந்தேகம் ஏற்பட்டு, உடல்களை தேடத் துவங்கினர்.அதே நேரத்தில், கொலையாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கையும் தீவிரப்பட்டிருந்தது. வெகுநேரம் நடந்த தேடலுக்கு பின் முஸ்கன் உடல் மீட்கப்பட்டது; ரித்திக் குறித்து தகவல் ஏதுமில்லை. "முஸ்கனை கொலை செய்த கொலையாளிகள், ரித்திக்கை உயிருடன் கையில் வைத்திருக்கலாம்' என்ற நம்பிக்கையுடன் கடத்தல்காரர்களுக்கு எதிரான வேட்டையை இன்னும் தீவிரப்படுத்தினர். நீண்ட நேர தேடலுக்கு பின், கொடூரன் மோகன்ராஜ் மட்டும் பிடிபட்டான். குழந்தைகள் இருவரையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்ததை போட்டுடைத்தான்; போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகே, ரித்திக் உடலும் ஒரு வழியாக மீட்கப்பட்டது. கொலைபாதக செயலின் கூட்டாளி மனோகரனும் பின்னர் பிடிபட்டான். பிள்ளைகள் இருவரையும் பலிகொடுத்த பெற்றோர், மீளாத்துயரில் தள்ளப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறுகையில்,"" காலை 7.55 மணிக்கே குழந்தைகள் கடத்தப்பட்ட போதிலும், 10.45 மணிக்குத்தான் எங்களுக்கே தகவல் கிடைத்தது. அதற்குள் கடத்தல் வேன் பொள்ளாச்சியை கடந்து கண்காணிப்பில்லா எல்லைக்குள் நுழைந்துவிட்டது. எங்களுக்கு தகவல் முன்னரே கிடைத்திருந்தால் உயிருடன் மீட்பதற்கான அவகாசம் கிடைத்திருக்கும்; இச்சம்பவத்தால், நாங்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்,'' என்றார்.
நாடகமாடிய கொலையாளி : போலீசாரிடம் பிடிபட்டதும் கொலையாளி மோகன்ராஜ், ஏதுமறியாதவனை போல நடித்துள்ளான். "என்ன சொல் றீங்க சார், ரஞ்சித்குமாரின் குழந்தைகளை கடத்தி கொலை செய்துவிட்டார்களா?' என எதிர்கேள்வி கேட்டு, போலீசாருக்கு ஆத்திரமூட்டியுள்ளான். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த போலீசார், "முறைப்படி விசாரணையை' துவக்க, கொலை செய்தததை ஒப்புக் கொண்டு, நடந்த அனைத்தையும் அச்சுக்கோர்த்தால் போல விவரித்தான். அதன்பிறகே, போலீசார் அடுத்த கட்ட விசாரணையை துவக்கினர்.
கடத்தப்பட்ட 2 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கடித்து கொலை : கார் டிரைவர் சிக்கினான் : கோவை, காத்தான்செட்டி சந்தில் வசிப்பவர் ரஞ்சித்குமார் ஜெயின்(40); சுக்ரவார்பேட்டை பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். இவரது மகள் முஸ்கின் (11), மகன் ரித்திக்(8). இருவரும் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் முறையே மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்தனர். நேற்று முன்தினம் காலை இருவரும் பள்ளிக்கு வேனில் செல்வதற்காக, வீட்டருகே நின்றிருந்தனர். வழக்கமாக வரும் வேனுக்கு பதிலாக, வேறு வேன் வந்து நின்றது. அதில், இருவரும் ஏறிச் சென்றனர். வேன் சென்ற சில நிமிடங்களில் வழக்கமாக வந்து செல்லும் வேன் வந்தது. பயணத்துக்கு குழந்தை வராததால் வேன் டிரைவர், ரஞ்சித்குமார் ஜெயினை மொபைல் போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். தான் வியாபார விஷயமாக வெளியூரில் உள்ளதாகக் கூறிய அவர், உடனடியாக தன் வீட்டாரை தொடர்பு கொண்டு கேட்க, குழந்தைகள் இருவரும் வேனில் பள்ளிக்குச் சென்று விட்டதாக தெரிவித்தனர். திடுக்கிட்ட ரஞ்சித்குமார், குடும்பத்தாரை உஷார்படுத்தி வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளிக்கச் செய்தார். இதையடுத்து, மாநகர போலீசார் வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினர்.
போலீசாரின் பல்வேறு கட்ட விசாரணையில், குழந்தைகளை கடத்திச் சென்றது, அவர்கள் வீட்டில் முன்னர் வேலை பார்த்த கார் டிரைவர் மோகன் என்பது தெரியவந்தது. மோகனை பிடித்து போலீசார் விசாரித்ததில், குழந்தைகள் இருவரையும் கடத்தி, உடுமலை அருகே உள்ள தளி பி.ஏ.பி., வாய்க்காலில் வீசியதாக தெரிவித்தார். போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல், சுல்தான்பேட்டை பி.ஏ.பி., வாய்க்காலில் குழந்தைகளை தேடி வந்தனர். நேற்று காலை 8.45 மணியளவில் வாவிபாளையம் பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் முஸ்கின் பிரேதம் மிதந்தது. பிரேதத்தை, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சதீஷ்குமார்(27), தண்ணீர் ஊற்றும் பரமன் (27) ஆகியோர் மீட்டு தண்ணீரில் அடித்துச் செல்லாதபடி, வாய்க்கால் கரையில் கயிற்றை கட்டி, அதை முஸ்கின் கையில் கட்டினர்.
இதுகுறித்து துணை கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர். வாவிபாளையம் வந்த அவர், முஸ்கின் உடல் மீட்கப்பட்டது குறித்து கமிஷனர் சைலேந்திரபாபுவுக்கு தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு கமிஷனர் வந்த பின், முஸ்கின் பிரேதம் வாய்க்காலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.போலீஸ் குழுவினர், வாவிபாளையம் பகுதி பி.ஏ.பி., வாய்க்காலில் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று ரித்திக் உடலை தேடும் பணியில் ஈடுபடத்துவங்கினர். இந்நிலையில் சிறுவனின் உடல் பல்லடம் அருகே வாய்க்காலி?ல் இருந்து கண்டெடுத்தனர். ரஞ்சித்குமாரின் உறவினர்கள், வாவிபாளையம் பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் குவிந்திருந்தனர்.
முஸ்கின் உடலில் எவ்விதமான காயமும் இருந்த தடயம் தெரியவில்லை. இருப்பினும் முஸ்கின் கொலை செய்யப்பட்டு பி.ஏ.பி., தண்ணீரில் வீசப்பட்டாரா அல்லது பிடித்து தள்ளப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ரஞ்சித்குமாரிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மோகன், குழந்தைகளை கடத்தியுள்ளான். அந்த எண்ணம் ஈடேறாது என நினைத்த மோகன், தன்னை குழந்தைகள் காட்டிக் கொடுத்து விடுவரோ என அஞ்சி, இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளான்.
கொலை செய்த இடத்தில் நடித்துக் காட்டிய டிரைவர்: ""குழந்தைகளுடன் விளையாடிய பின், அவர்களை கால்வாயில் தள்ளிவிட்டு வந்தேன்,'' என கைதான டிரைவர் தெரிவித்துள்ளான். குழந்தைகளை கடத்தி, பணம் கேட்டு மிரட்டி, சம்பாதிக்கலாம் என டிரைவர் மோகன்ராஜ், அவனது நண்பன் பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டிபட்டணம் மனோகரனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளான். அதற்கென நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த குழந்தைகளை கடத்தினான். பொள்ளாச்சி வந்து, மனோகரனை மொபைல் போனில் அழைத்தான். மனோகரனை தொடர்பு கொள்ள முடியாததால், பொள்ளாச்சியிலிருந்து நா.மூ., சுங்கம் வந்து, அங்கிருந்து ஆனைமலை - எரிசனம்பட்டி - பழநி சாலையில் வந்தான். தொடர்ந்து மனோகரனை தொடர்பு கொள்ள முடியாததால், பகல் 2 மணியளவில் மெயின் ரோட்டிலிருந்து பி.ஏ.பி., பிரதான கால்வாய் சாலையில் வடக்கு நோக்கி காரை ஓட்டி வந்தான்.
பகல் 2.30 மணியளவில் குழந்தைகள் பசிக்கு அழுததால், கால்வாயில் 8.3வது கி.மீட்டரில், பூலாங்கிணர் கிளை கால்வாய் பிரியும் இடத்தில் குட்டை கருப்பராயன் கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு, குழந்தைகளை சாப்பிட வைத்தான். பின்னர் சிறிது தூரத்தில் ஷட்டர் மற்றும் வாய்க்காலில் இறங்கும் படிக்கட்டுகள் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, அமர வைத்து விளையாடினான். அப்போதும், மனோகரனை தொடர்பு கொண்டும் பயனில்லாததால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு திரும்பச் சென்றாலும் சிக்கல் என நினைத்து, கரையில் அமர்ந்திருந்த குழந்தைகளை திடீரென வாய்க்கால் தண்ணீரில் தள்ளினான்.
குழந்தைகள் அலறியவாறு, உயிருக்கு போராடியும் மனம் இளகாமல் வேடிக்கை பார்த்தான். சிறிது நேரத்தில் குழந்தைகள் நீரில் மூழ்கினர். பின்னர், வந்த வழியிலேயே கோவைக்கு திரும்பிச் செல்லும் போது போலீசில் சிக்கினான்.குற்றவாளியைப் பிடித்த போலீசார் நேற்று முன்தினம் இரவு, அதே வழித்தடத்தில் அழைத்து வந்தனர். போலீசாரிடம், மிரட்டி பணம் சம்பாதிக்க கடத்தியது, நண்பனுடன் திட்டமிட்டது, வந்த வழித்தடம், சம்பவம் நடந்த இடம், கொடூர மனதுடன் தண்ணீரில் தள்ளிவிட்டு கொலை செய்த விதம் குறித்து போலீசாருக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு மோகன் விளக்கினான்.
தகவல் கொடுத்த விவசாயி: உடுமலை அருகேயுள்ள சர்க்கார்புதூர் கிராமத்திலுள்ள பி.ஏ.பி., பிரதான கால்வாயில், குழந்தைகளின் புத்தக "பேக்' மிதந்து சென்றதை நேற்று முன்தினம் மாலை பார்த்த விவசாயி சவுந்தரராஜன், பேக்கை மீட்டார். அதிலிருந்த பள்ளி போன் நம்பருக்கு தகவல் கொடுத்தார். பி.ஏ.பி., பிரதான கால்வாய், திருமூர்த்தி அணையிலிருந்து 148 கி.மீ., நீளமுடையது. அதில், வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்ததோடு, இரவு நேரமானதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இரவு முழுவதும் வாய்க்கால் கரை ஓரத்திலேயே தேடும் பணி நடந்ததோடு, ஷட்டர்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் தேடுதல் பணி நடந்தது. இரவு முழுவதும் தேடியும் குழந்தைகளின் சடலங்கள் சிக்கவில்லை. நேற்று அதிகாலை தேடும் பணிக்காக பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. உடுமலை சர்க்கார்புதூர் வாய்க்கால் கரையில் உள்ள குட்டை கருப்பராயன் கோவிலில், சாப்பாடு பேக் இருந்ததை போலீசார் மீட்டனர். அதில், சப்பாத்தி, திராட்சை மற்றும் முட்டைகோஸ் பொரியல் ஆகியவை இருந்தன. இதில், கொஞ்சம் மட்டும் சாப்பிடப்பட்டிருந்தது. வாய்க்காலின் கடைசி பகுதியான சுல்தான்பேட்டை வாவிபாளையம் பகுதியில், பெண் குழந்தை முஸ்கினின் சடலம் மட்டும் மீட்கப்பட்டது.
குழந்தைகளை கடத்தி கொலை செய்த கொடூர கொலைகாரன் சிறையில் அடைப்பு: பணம் பறிப்பதற்காக குழந்தைகளைக் கடத்திய மோகன்ராஜ் போலீசில் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில், குழந்தைகளைக் கால்வாயில் தள்ளி விட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான். தப்பியோட நினைத்த மோகன்ராஜை , போலீசார் நேற்று முன் தினம் இரவில் சுற்றி வளைத்துப் பிடித்தனர். நேற்று முழுவதும் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.கோவை மாநகர காவல்துறை கமிஷனர் சைலேந்திரபாபுவின் உத்தரவின்பேரில், நேற்று அவனை கைது செய்த வெரைட்டிஹால் போலீசார், அவன் மீது கொலை வழக்கு மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவுசெய்தனர். நேற்று இரவு 10.45 மணிக்கு, ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தியின் முன்பாக மோகன்ராஜை போலீசார் ஆஜர் படுத்தினர். வரும் 12ம் தேதி வரையிலும் அவனை "ரிமாண்ட்' செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.அவனது முகத்தில் கருப்புத் துணியைச் சுற்றி, பலத்த பாதுகாப்புடன் அவனை அழைத்துச் சென்ற போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஈவு இரக்கமின்றி, அப்பாவிக் குழந்தைகளை கொலை செய்த மோகன்ராஜூவுக்கு ஆதரவாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எந்த வக்கீலும் ஆஜராவதில்லை என முடிவெடுத்திருப்பதாக வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறுவன் உடல் பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் மீட்பு : கோவையில் கடத்தப்பட்ட துணிக்கடை அதிபர் மகனின் சடலம், பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் நேற்று மீட்கப்பட்டது.கோவை துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கின் ஜெயின் (11), மகன் ரித்திக் ஜெயின் (8), இருவரும் கார் டிரைவரால் கடத்தப்பட்டு உடுமலை அடுத்த தளி பி.ஏ.பி., வாய்க்காலில் வீசப்பட்டனர். ரித்திக்கின் சடலம் கிடைக் காததால், போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடும் பணிக்காக, பிரதான வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. சின்னபாப்பானூத்து பகுதியிலிருந்து கோமங்கலம் போலீசாரின் எல்லை துவங்குகிறது. அங்கு துவங்கும் வாய்க்காலிருந்து சடலத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் கெடிமேடு அருகே பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் நேற்று காலை 11.40 மணிக்கு, நம்பிநாராயணன் என்பவர் பள்ளி சீருடை அணிந்த நிலையில் மாணவன் சடலம் மிதந்து வருவதை பார்த்துள்ளார். வாய்க்கால் மேடு வழியாக சடலத்தை, பைக்கில் பின் தொடர்ந்து வந்த அவர், தென்னை மட்டையை கொண்டு சடலத்தை தடுத்து, அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.வாய்க்காலுக்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாரிமுத்து, கனகராஜ், செந்தில்குமார் ஆகியோர், அரைமணி நேர போராட்டத்திற்கு பின் பகல் 12.20 மணிக்கு சடலத்தை வெளியே மீட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் போலீசார், மாணவன் சடலத்திலிருந்த அடையாளங்களை குறித்து கொண்டு, கோவை போலீஸ் கமிஷனருக்கும்,மாணவரின் உறவினருக்கும் தகவல் தெரிவித்தனர். கமிஷனர் சைலேந்திரபாபு, அங்கு வந்து சடலத்தை பார்வையிட்டு, மீட்டவர்களிடம் விசாரித்தார். அதன்பின், கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் கூறியதாவது: சின்னப்பாப்பனூத்து பகுதியிலிருந்து குண்டலப்பட்டி அருகே வரும் வழியில் வாய்க்கால் குறுகி இருப்பதோடு, புதர் அதிகளவில் வளர்ந்திருக்கும். வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தியதும், புதரின் இடையில் சடலம் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால், நீரின் வேகத்தில் புதரில் சிக்கியிருந்த சடலம் அடித்து வந்திருக்கலாம், என்றனர். ரித்திக்கின் சடலத்தை மீன் அரித்ததால் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. கை, காலில் தோலுரிந்த நிலையிலும், கண்களிலிருந்து ரத்தம் வடிந்தும் காணப்பட்டது. மூன்று நாட்களாக தண்ணீரில் சடலம் ஊறியதால், அழுகத் துவங்கியது.
இரவு, பகலாக தேடுதல் வேட்டை: மாணவர் ரித்திக்கின் உடலை தேடும் பணியில், போலீசார் ஒருப்புறம் ஈடுபட்டிருந்தாலும், ரஞ்சித்குமாரின் உறவினரும் வாய்க்கால் முழுவதும் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரு தரப்பிலும், இரவு, பகலாக தேடும் வேட்டை நடந்தது. ரஞ்சித்குமாரின் உறவினர்களுக்கு, பொள்ளாச்சி சுற்றியுள்ள பகுதி தெரியாததால், உள்ளூர் ஆட்களை உடன் அழைத்து சென்று தேடும் பணியை மேற்கொண்டனர். இரண்டு நாட்களில், 120 கி.மீ., தூரம் போலீசாரும், உறவினரும் தேடி அலைந்துள்ளனர். அதன் பின், மாணவரின் சடலம் கைப்பற்றப்பட்டது.
சடலத்தைத் தேடி அலைந்த போலீசார் : பி.ஏ.பி., வாய்க்காலில் வீசப்பட்ட மாணவர் ரித்திக் சடலம், நெகமம் அடுத்த கப்பாளங்கரை அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் ஒதுங்கி இருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை தேடினர். அங்கு, சடலம் கிடைக்கவில்லை. இந்நிலையில், காமநாயக்கன் பாளையம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் சடலம் இருப்பதாக மற்றொரு தகவல் வெளியானது. பல்லடம் போலீசார் சென்று சடலத்தை தேடி, அங்கும் சடலம் கிடைக்கவில்லை. இறுதியில், பொள்ளாச்சி அடுத்த கெடிமேடு அருகே வாய்க்காலிலிருந்து ரித்திக்கின் சடலம் மீட்கப்பட்டது. மூன்று பகுதியை சேர்ந்த போலீசாரும் சடலத்தை தேடி அலைந்தனர்.
குழந்தைகள் கொலையில் இன்னொரு டிரைவரும் உடந்தை : பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கொடுமை : கோவையில் அக்கா - தம்பி கடத்தி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தில் உடந்தையாக இருந்த மற்றொரு கார் டிரைவரை தனிப்படையினர் தேடுகின்றனர். சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை, ரங்கேகவுடர் வீதி அருகேயுள்ள காத்தான்செட்டி சந்து பகுதியில் வசிப்பவர் ரஞ்சித்குமார் ஜெயின்(40); துணிக்கடை வைத்துள்ள இவர் நூல் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இவரது மகள் முஸ்கின்(11), மகன் ரித்திக்(8). இருவரும் தனியார் பள்ளியில் 5 மற்றும் 3ம் வகுப்பில் படித்து வந்தனர்.கடந்த வெள்ளியன்று, குழந்தைகள் இருவரும் பள்ளி செல்வதற்காக வீட்டருகே, ஆம்னி வேனுக்காக காத்திருந்தனர். அப்போது வந்த ஆம்னி வேனில் ஏறிய இருவரும் கடத்தப்பட்டனர். காலை 10.30க்கு தகவல் கிடைத்த போலீசார் கோவை நகர் முழுவதும் ஆம்னி வேன்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்படுத்தினர்.
காணாமல் போன இருவரையும் கண்டு பிடிக்க, கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவில், உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் எட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. கால் டாக்சி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கொடுத்த தகவலில், கடத்தலில் ஈடுபட்டது பொள்ளாச்சியைச் சேர்ந்த டிரைவர் மோகன்ராஜ் என்பதுதெரிந்தது.அவரது மொபைல் போனின் இ.எம்.ஐ.இ.,எண்ணைக் கொண்டு தேடிபோது, திருமூர்த்திமலை அடிவாரத்தில் இருப்பது தெரிந்தது. உஷார் அடைந்த தனிப்படை போலீசார், பொள்ளாச்சி மற்றும் உடுமலை போலீசாருக்கு தகவல் கொடுத்ததுடன் அப்பகுதிக்கு விரைந்தனர்.இதற்கிடையில், சர்க்கார்புதூர் அருகே ஸ்கூல் பேக் பி.ஏ.பி.,கால்வாயில் மிதந்து வந்தது கைப்பற்றப்பட்டு, அது கடத்தப்பட்ட மாணவன் ரித்திக்கின் ஸ்கூல் பேக் என்பது உறுதி செய்யப்பட்டது.இச்சூழலில், தனிப்படை போலீசாரின் தீவிர கண்காணிப்பில் டிரைவர் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணைத் தொடர்ந்து,70 கி.மீ., தூரத்தில் உள்ள பல்லடம் அருகே கால்வாயில் மிதந்து வந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சிறுவனின் உடல் கால்வாய் நெடுக தேடியும் கிடைக்கவில்லை. ஆனாலும், தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இரண்டு நாட்களுக்கு பின், நேற்று பகல் 11.30 மணி அளவில், உடுமலை - பொள்ளாச்சிக்கு இடையில் உள்ள கெடிமேடு எனும் பகுதியில் பி.ஏ.பி.,பிரதான கால்வாயில் மிதந்து வந்த சிறுவனின் உடல் சிக்கியது.கைது செய்யப்பட்ட டிரைவர் மோகன்ராஜிடம் போலீசார் நடத்திய சோதனையில் பல திடுக் செய்திகள் வெளியாகியுள்ளன. டிரைவர் மோகன்ராஜ் ஏற்கனவே 15 நாட்கள் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாடகை வேன் டிரைவராக பணியாற்றியுள்ளான். அப்போது, மாணவி முஸ்கின், சிறுவன் ரித்திக் ஆகியோரை ஏற்றிச் சென்றுள்ளான். அப்போதெல்லாம் சிறுமிக்கும், சிறுவனுக்கும் சாக்லெட் வாங்கி கொடுத்துள்ளான். இதனால், டிரைவரிடம் அன்பாக பழகி அண்ணா என்றே அழைத்து வந்துள்ளனர்.
கடந்த வெள்ளியன்று, பள்ளி வாகனம் வருவதற்கு முன்பே வேனுடன் சென்று, காத்திருந்த இருவரை அழைத்து சென்றுள்ளான். பொள்ளாச்சிக்குள் நுழைந்ததும் அங்கிருந்த மற்றொரு கால் டாக்சி டிரைவர் மனோகரை தன்னுடன் அழைத்துக் கொண்டு திருமூர்த்தி மலை நோக்கி சென்றுள்ளான். மலைப்பகுதிக்கு வேன் செல்லும் போதே, சிறுவன் ரித்திக்கின் கை, கால்களை கட்டி, பின் சீட்டுக்கு அடியில் கிடத்தி உள்ளனர். இதன் பின் முன்சீட்டில் அமர்ந்திருந்த மோகன்ராஜ், கதறிய சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளான். இதற்கு, உடன் வந்த டிரைவர் மனோகரனும் உதவி செய்துள்ளான்.இதன்பின், இருவரையும் மிரட்டி, கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட வைத்துள்ளனர். இதன் பின் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர். பாதிதூரம் சென்றதும் அதற்கு மேல் நடக்க முடியாது எனக்கூறி குழந்தைகள் அங்கேயே உட்கார்ந்து விட்டனர்.வேறு வழியில்லாமல் மீண்டும் மலை அடிவாரத்துக்கு வந்தனர். தயாராக கொண்டு வந்திருந்த பாலில் சாணிப்பவுடரை கலக்கி குடிக்க கொடுத்துள்ளனர். சாணிப்பவுடர் கலந்த பாலை வாயில் ஊற்றியதும் கசப்பதாகக்கூறி குழந்தைகள் அழுததோடு,அதை கீழே துப்பி விட்டனர்.ரகசியமாக பேசிக் கொண்ட டிரைவர்கள் இருவரும், வேனில் இருந்து பிளாஸ்டிக் பேக்கை கொண்டு எடுத்து வந்து கழுத்தை இறுக்கி உள்ளனர். மூச்சுத் திணறிய இருவரும் சத்தமாக கத்தியுள்ளனர். இதில் பயந்து போன டிரைவர்கள் இத்திட் டத்தையும் கைவிட்டு விட்டனர்.தொடர்ந்து, இருவரையும் சாப்பிடச் சொல்லி மீதமிருந்த டிபன்பாக்சையும், தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தனர். அழுது கொண்டே சாப்பிட்டு முடித்த குழந்தைகளை, அருகில் உள்ள கால்வாயில் கை கழுவும்படி மோகன்ராஜ் கூறியுள்ளான். பயந்து போன சிறுமி, வாட்டர் கேனில் உள்ள நீரில் கையை கழுவிக் கொள்வதாக தெரிவித்து உள்ளாள். உடனே, சிறுவன் ரித்திக்கை கால்வாயில் கைகழுவ அனுப்பினான். சிறுவனும் வாய்க்காலில் ஓடும் நீரில் கை கழுவிக் கொண்டு திரும்பினான். அப்போது டிரைவர் மோகன்ராஜ், "யாரையும் தண்ணீரில் தள்ளி விடமாட்டேன். தம்பியை பாதுகாப்புக்கு அழைத்துச் சென்று கை கழுவிக் கொண்டு, பாட்டிலில் தண்ணீர் எடுத்து வா' என, அன்பாக பேசியுள்ளான்.உண்மை என நம்பிய முஸ்கின், தனது தம்பியுடன் சென்று, கால்வாயில் கை கழுவிக் கொண்டிருந்தாள். சிறுவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்த டிரைவர்கள், கீழே குனிந்து இருவரையும் ஓடும் நீரில் தள்ளினர். கதறியபடியே மூழ்கிய குழந்தைகளை நீர் அடித்துச் சென்றது. இரக்கமற்ற இக்கொலையில் ஈடுபட்ட டிரைவர்களில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு ,சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமறைவான மற்றொரு டிரைவர் மனோகரனை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட டிரைவர் மீது கடத்தல், கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.
இரவு-பகலாக தேடிய தனிப்படையினர் :கால்டாக்சி டிரைவர்களால் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளை மீட்க கோவை போலீஸ் கமிஷனர் உத்தரவில் எட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி கமிஷனர்கள் சார்பில் குமாரசாமியும், இன்ஸ்பெக்டர்கள் கனகசபாபதி, அண்ணாதுரை, நுண்ணறிவுப்பிரிவு எஸ்.ஐ.,முத்துமாலை மற்றும் எஸ்.ஐ.,கள் ஜோதி, ராஜேந்திரன் ஆகியோர் குழு தீவிர தேடுதலில் இறங்கி, குழந்தைகளை கண்டு பிடிப்பதற்கு முன், அவர்களை கடத்திய டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து விடிய விடிய தேடுதல் நடத்தி நேற்று பகலில் சிறுவனின் உடலை கைப்பற்றினர். இவர்களின் சீரிய பணியை பாராட்டி 25 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்க உத்தரவிடப்பட்டது.
கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் அவசியமா? கார் போன்ற வாடகை வாகனங்களின் பக்கவாட்டு மற்றும் பின்புற கண்ணாடியில் "கூலிங் பேப்பர்' எனப்படும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. வாகனத்தின் உள்ளே நடப்பதை வெளியில் இருப்பவர்கள் காண முடியாது. கடத்தப்பட்ட நபர் உள்ளே உதவி கோரி சைகை செய்தாலும் வெளியில் தெரியாது.சாதாரண கண்ணாடியாக இருப்பின், பின்னால் செல்லும் லாரி போன்ற உயரமான வாகன டிரைவர்களுக்கு, முன்னால் செல்லும் காருக்குள் நடப்பது தெரிந்து விடும். "கூலிங் பேப்பர்' ஒட்டக்கூடாது என, ஏற்கனவே விதிமுறை உள்ளது. ஆனால், நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வாகனங்களில் "கூலிங் பேப்பர்' ஒட்டுவது மற்றும் ஸ்கிரீன் அமைப்பது போன்றவற்றை வாடகை வாகன உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், பெரும்பாலான சட்டவிரோத செயல்களை குறைக்க முடியும்.
தண்ணீரில் மிதந்த பிஞ்சுகள்... கண்ணீரில் தத்தளித்த கோவை:இரண்டு நாட்களாக அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது கோவை. பணத்துக்காக இரு பள்ளிக்குழந்தைகள் கடத்தப்பட்டு, இரக்கமற்ற கொடூரனால் கொலை செய்யப்பட்ட சம்பவம், கோவையை அதிர வைத்துள்ளது. காலையில் உற்சாக ஊற்றாய் பள்ளி கிளம்பிய குழந்தைகளை இனி எப்போதும் காணப்போவதில்லை என, அவர்களின் தாய் கனவிலும் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்.கோவை ஒன்றும் குற்றமே இல்லாத நகரம் இல்லை. சிறு சிறு சம்பவங்கள் நடந்தபடிதான் இருக்கின்றன. ஆனால், இரு பிஞ்சுகளின் கொலை இதுவரை கோவை கண்டிராத ஒன்று. பள்ளிக்கு வழக்கமாக செல்வதற்காக குழந்தைகள் காத்திருக்கின்றன. வழக்கம் போல் கார் வருகிறது; நீண்ட நாட்களாக வராத டிரைவர் வருகிறார். ஆனால், ஏற்கனவே நன்கு பழக்கமான டிரைவர் என்பதால், தம்பியுடன் வாகனத்தில் நுழைகிறாள் அச்சிறுமி.
அதற்குப்பின் நடந்தது சோகசம்பவம். குழந்தைகள் கடத்தப்பட்டதை, மிக தாமதமாக உணரும் பெற்றோர், போலீசில் புகார் செய்கின்றனர். போலீஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டபோதும், நிலைமை கைமீறி விட்டது. கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள உடுமலை அருகே பி.ஏ.பி., கால்வாயில் புத்தகப்பை மிதக்கிறது என்ற தகவல், விபரீதம் நிகழ்ந்திருப்பதை சுட்டிக்காட்டியது.போலீசாரின் வாகன சோதனையில் குற்றவாளி சிக்கினான். "பணத்துக்காக கடத்தினேன். மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில், கால்வாய்க்குள் குழந்தைகளை தள்ளிவிட்டேன்' என "பகீர்' தகவலை அந்த கொடூரன் சொல்ல, அலறியடித்தபடி கால்வாயில் தேடியது போலீஸ். தள்ளிவிட்ட இடத்தில் இருந்து70 கி.மீ., தூரத்தில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இன்னொரு பிஞ்சின் உடல் நேற்று பொள்ளாச்சி கெடிமேடு அருகே மீட்கப்பட்டது.சம்பவம் அறிந்ததும், கோவை மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். முதல்நாள் சம்பவம் கேள்விப்பட்டதும், "பணத்துக்காக கடத்தியிருப்பர். குழந்தைகள் எப்படியும் மீட்கப்படும்' என்றுதான் எண்ணியிருந்தனர். அவர்களின் பெற்றோரைப்போலவே, கோவை மக்களும் பதைபதைத்துக் காத்திருந்தனர். ஆனால், நிதர்சனம் வேறாக இருந்தது. எவரது பிரார்த்தனையும் பலிக்கவில்லை. குழந்தைகள் இறந்தது, இறந்ததுதான்.இறுதி ஊர்வலத்தில் இளகிய இதயங்கள்: சிறுமி முஸ்கின் சடலம் முன்னதாகவே மீட்கப்பட்டதால், நேற்று காலை முஸ்கினின் இறுதி ஊர்வலம் நடந்தது. கோவை ரங்கேகவுடர் வீதியில், முஸ்கின் குடும்பத்தினரின் வசிப்பிடத்தில் துவங்கிய இறுதி ஊர்வலம் ஒப்பணக்கார வீதி, உக்கடம், கரும்புக்கடை வழியாக ஆத்துப்பாலம் மயானத்தை சென்றடைந்தது.முஸ்கின் மரணம் கோவை மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால், இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். வழிநெடுக இருமருங்கிலும் மக்கள் திரண்டு நின்று கண்ணீருடன், முஸ்கின் சடலத்தை வழியனுப்பினர்.வாகனங்களில் சென்றவர்கள், அலுவலகம் சென்றவர்கள் என ஊர்வலம் சென்ற வழியில் இருந்த பொதுமக்கள் முஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். காலை 9.00 மணிக்கு துவங்கிய இறுதி ஊர்வலம், மதியம் 12.40 மணி வரை நடந்தது. கண்களில் கண்ணீர் திரள பொதுமக்கள் பங்கேற்ற காட்சி, காண்போரின் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. நேற்று காலை வரை முஸ்கின் சடலம் மட்டுமே கிடைத்திருந்தது. இதனால், உறவினர்கள் ரித்திக் உயிருடன் இருப்பதாகவே நம்பினர். "நிச்சயம் உயிருடன் வீடு திரும்புவான் ரித்திக்' என, உடைந்த குரலில் திரும்பத் திரும்ப கூறியபடி இருந்தனர். குற்றவாளி மோகன்ராஜுக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்தனர். குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். "கோர்ட், வழக்கு என இழுத்தடிக்காமல் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என, பொதுமக்கள் ஆவேசமாக கோஷமிட்டனர்.கொடுஞ்செயலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொதுமக்கள் ஏந்திச் சென்றனர். "கொலை செய்வதை தவிருங்கள்; என் குழந்தை எனக்கு வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பதாகை பலரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. மனித நேய மக்கள் கட்சி சார்பில், கொலைகாரனை தூக்கிலிட வலியுறுத்தி கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மக்கள் வெள்ளத்தில் மிதந்த முஸ்கின் உடல், ஆத்துப்பாலம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக