கோவை: கோவையில் அக்கா, தம்பியான பள்ளிச் சிறார்களைக் கடத்திச் சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த மோகன் என்கிற மோகனகிருஷ்ணன், தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு தப்ப முயன்றதால் அவனை போலீஸார் சுட்டுக் கொன்றனர் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போலீஸ் என்கவுன்டர் குறித்து சைலேந்திரபாபு இன்று கூறுகையில்,
விசாரணைக்காக மோகன் என்கிற மோகனகிருஷ்ணனை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அதிகாலை ஐந்தரை மணியளவில் போத்தனூர் அருகே வேன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென போலீஸ் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துப்பாக்கி முனையில் போலீஸாரை மிரட்டத் தொடங்கியுள்ளான் மோகன கிருஷ்ணன்.
கேரளாவுக்குப் போகுமாறு அவன் கூறியுள்ளான். மேலும் துப்பாக்கி முனையில் போலீஸ் அதிகாரிகளையும் கடத்த முயன்றான். மேலும் துப்பாக்கியாலும் சுட்டுள்ளான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக சுட்டுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சுட்டதில் அவன் மீது 3 குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தான் என்றார் சைலேந்திர பாபு.
சப் இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்:
இந்த நிலையில் மோகனகிருஷ்ணனால் சுடப்பட்டதாக கூறப்படும் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆறே கால் மணியளவில் இவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் முத்துமாலையின் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது. இதனால் அவரது நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது.
இன்னொருவரான ஜோதியின் கையில் குண்டு பாய்ந்துள்ளது. அவர் நிலைமை பரவாயில்லை.இருவருக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
போத்தனூர் காவல் நிலையத்தில் இன்னொரு குற்றவாளி
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இன்னொரு குற்றவாளியான மனோகரன் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. இதனால் மர்மம் நிலவியது. ஆனால் தற்போது மனோகரன் போத்தனூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு கருதி அவனை போலீஸார் அங்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக