மும்பை: ஆம்ஸ்டர்டாமில் இருந்து மும்பை வந்து கொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று வந்த தகவலையடுத்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமி்ல் இருந்து 244 பயணிகளுடன் அந்த விமானம் நேற்றிரவு மும்பை வந்து கொண்டிருந்தது. 11.20க்கு தரையிறங்க இருந்த அந்த விமானத்தின் சரக்குப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பார்சல் இருப்பதாக ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய அதிகாரிகள் மும்பை விமான நிலையத்துக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து மற்ற விமானங்களை வானில் சுற்றச் சொல்லிவிட்டு, இந்த விமானத்தை 20 நிமிடங்கள் முன் கூட்டியே தரையிறங்க மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அனுமதி அளித்தது.
இதையடுத்து பலத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் விமானம் தரையிறங்கியது. பயணிகள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, விமானம் விமான நிலையத்தின் இறுதிப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு முழுமையாக சோதனையிடப்பட்டது.
நள்ளிரவு 2 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக