செவ்வாய், 9 நவம்பர், 2010

காஷ்மீர் விவகாரத்தை இந்தியா, பாக்.தான் தீர்க்க வேண்டும்-ஒபாமா

Obama and  Manmohan Singh Meetingடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவால் எந்த தீர்வையும் தர முடியாது. அதை இந்தியாவும், பாகிஸ்தானும்தான் தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதிபர் ஒபாமா.

ஒபாமா, இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கிட்டத்தட்ட 55 நிமிடங்கள் பேசினார். முதலில் இரு தலைவர்களும் தனியாக பேசினர். பின்னர் இரு நாட்டுக் குழுக்கள் இணைந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், பாகிஸ்தானுடன் பேசுவதற்கு இந்தியா ஒருபோதும் தயங்கியதில்லை, அஞ்சியதில்லை. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எல்லை தாண்டிய தீவிரவாதம் தலைவிரித்தாடும் நிலையில் மறுபக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பொருத்தமாக இருக்காது.

பாகிஸ்தானுடனான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. அதேசமயம், தீவிரவாத செயல்களை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தீவிர அக்கறை காட்ட வேண்டும். அப்படி நடந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.

உலகம் முழுவதும் தீவிரவாதம் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான போரை தீவிரப்படுத்துமாறு நான் கூறியதை அதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா தற்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை தளர்த்துமாறு நான் அதிபரை கேட்டுக் கொண்டேன். அவரும் அதுகுறித்துப் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பல்வேறு துறைகளில் அமெரிக்கா உதவி வருகிறது. மும்பையில் நவம்பர் 6ம் தேதி கையெழுத்தான பல்வேறு ஒப்பநதங்கள், இரு நாடுகளின் உறவுகளையும் மேம்படுத்த உதவும். இந்த ஒப்பந்தங்கள் மூலம், பாதுகாப்பு, விண்வெளி, அணு சக்தி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்கா இனி பெருமளவிலான உதவிகளை இந்தியாவுக்கு அளிக்கும்.

இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் பணிகளை அளித்ததன் மூலம் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, அமெரிக்காவின் உற்பத்தித் திறன்தான் உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் வேலைகளைப் பறிக்கும் வேலையில் இந்தியா ஈடுபடவில்லை.

அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 9 முதல் 10 சதவீதமாக உயர்த்த தீவிர முயற்சிகள் எடுக்கப்படும். உறுதியான, வளமான அமெரிக்கா திகழ்வது உலகத்திற்கே நன்மை பயக்கும்.

வளர்ச்சியை அதிகரிக்கவும், ஏழ்மையை ஒழிக்கவும் பெருமளவிலான அமெரிக்க முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது. அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து ஒரு டிரில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை எதிர்பார்க்கிறோம். அதை அமெரிக்கா பூர்த்தி செய்யும் என நம்புகிறோம் என்றார் பிரதமர்.

அதிபர் ஒபாமா பேசுகையில், இந்தியா வளர்ந்து வரும் சக்தி அல்ல. மாறாக ஏற்கனவே உலக அரங்கில் அது ஒரு வல்லரசாக உயர்ந்து விட்டது.

காஷ்மீர்ப் பிரச்சினை, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இரு நாட்டுப் பிரச்சினை. இதில் அமெரிக்காவால் எந்த தீர்வையும் திணிக்க முடியாது. அதை செய்யவும் மாட்டோம். இதை இரு நாடுகளும்தான் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பாகிஸ்தான் அமைதியாக இருந்தால்தான் இந்தியாவுக்கு நல்லது.

இரு நாடுகளும் தெற்காசியாவில் பதட்டத்தை தணிக்கும் வகையில் செயல்படுவதில் உறுதியாக உள்ளன. இந்த சமயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா விரும்பவில்லை. இந்த இரு நாடுகளுமே தங்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்த முடியும்.

காஷ்மீரை முன்வைத்து இரு நாடுகளும் தங்களது பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை.

வருகிற ஆண்டுகளில், வருகிற மாதங்களில், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்க தீவிரமாக முயல்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சாதாரணமானதல்ல. அசாதாரணமான ஒன்று இது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் தொழில்நுட்பங்களால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமே தவிர குறையாது.

மும்பையில் மேற்கொள்ளப்பட்ட 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவுக்கு 54,000 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் நான் ஏன் அதிக நேரத்தை செலவிடுகிறேன் என்று அமெரிக்காவில் கேட்பவர்களுக்கு இதுதான் எனது பதில்.

ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் தற்போது வளர்ச்சி இல்லை அல்லது மிக மெதுவான வளர்ச்சி என்ற நிலையில்தான் உள்ளன.

உலகப் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக இந்தியா உள்ளது. இந்தியா பொருளாதார பிரச்சினையில் சிக்கியிருக்கவில்லை.

அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்த, வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதில் நான் உறுதியாக உள்ளேன். அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கும் நன்மை பயக்கக்கூடியதாகும்.

ஐ.நா.சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது தொடர்பாக இன்று மாலை நாடாளுமன்றத்தில் நான் நிகழ்த்தப் போகும் உரையில் எனது கருத்தை தெரிவிக்கிறேன் என்றார் ஒபாமா.

முன்னதாக இரு தலைவர்களும் சந்தித்தபோது, பாகிஸ்தான் மீது பிரதமர் மன்மோகன் சிங் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியதாக தெரிகிறது. குறிப்பாக தீவிரவாத அமைப்புகளை தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரித்து வருவதையும், இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ராணுவம் விரும்பவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
  
லஷ்கர் இ தொய்பா அமைப்பு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய மிரட்டலாக இருந்து வருவதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

கருத்துகள் இல்லை: