செவ்வாய், 9 நவம்பர், 2010

காமன்வெல்த் போட்டி ஊழல்: கல்மாடி பதவி பறிப்பு காங்.பாராளுமன்ற செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்

புதுடெல்லி, நவ. 9-
 
காமன்வெல்த் போட்டி ஊழல்: 
 கல்மாடி பதவி பறிப்பு
 
 காங்.பாராளுமன்ற செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்காமன்வெல்த் விளையாட்டு போட்டி டெல்லியில் கடந்த மாதம் வெற்றி கரமாக நடந்தது. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சுரேஷ் கல்மாடி தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு பிரதமர் மன் மோகன்சிங் போட்டி முடிந்த மறுநாளே உத்தரவிட்டார்.
 
கல்மாடி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். புனே தொகுதி எம்.பி.யாக உள்ளார். பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் உள்ளார்.
 
காமன்வெல்த் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கல்மாடியிடம் இருந்து விலகியே இருந்தது. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு நடந்த பாராட்டு விழாவில் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கல்மாடியை புறக்கணித்தனர். அதோடு கல்மாடியை சந்திக்க சோனியாகாந்தி தொடர்ந்து மறுத்து வந்தார்.
 
இந்த நிலையில் காமன் வெல்த் ஊழல் தொடர்பாக கல்மாடியின் பாராளுமன்ற காங்கிரஸ் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற காங்கிரஸ் செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு அவரை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதாகவும், இதைத் தொடர்ந்து கல்மாடி ராஜினாமா செய்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறும்போது, காங்கிரஸ் பாராளுமன்ற செயலாளர் பதவியில் இருந்து கல்மாடியின் ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றார்.
 
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பும் என்பதால் கல்மாடியின் பதவியை சோனியாகாந்தி பறித்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: