கோவை: கோவையில் அக்கா, தம்பியான பள்ளிச் சிறார்களைக் கடத்திச் சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணனை போலீஸார் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கோவை ரங்கே கெளடர் வீதியைச் சேர்ந்தவர் ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித் ஜெயின். இவரது மகள் முஷ்கின் (11), அவளது தம்பி ரித்திக் ஜெயின் (8). இருவரையும் காரில் கடத்திச்சென்று சிறுமியைக் கற்பழித்து பின்னர் இருவரையும் பி.ஏ.பி. கால்வாயில் தள்ளி விட்டுக் கொலை செய்ததாக மோகனகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விசாரணைக்காக இருவரையும், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நான்கு நாள் அனுமதி கேட்டு வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி 5வது நீதித்துறை நடுவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் போலீசார் உங்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அவர்களுடன் செல்ல விருப்பமா என கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர். மேலும், இவ்வழக்கில் மேலும் இரு டிரைவர்கள் எங்களுடன் இருந்தனர் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து 3 நாள் காவலில் அவர்களை அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலும், விசாரணை முடிவடைந்து நவம்பர் 11ம் தேதி இருவரையும் ஆஜர்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரையும் செட்டிக்குளம் பகுதிக்கு முதலில் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே வந்த போது, மோகனகிருஷ்ணன் திடீரென போலீசாரின் துப்பாக்கியைப் பிடுங்கி போலீசாரை சுட்டுவிட்டு தப்பி ஓடினான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மோகனகிருஷ்ணனை துப்பாக்கியால் சுட்டார். இதில் நெற்றி, இடுப்பில் குண்டு பாய்ந்து மோகன கிருஷ்ணன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
முன்னதாக மோகனகிருஷ்ணனையும், மனோகரனையும் போலீஸார் தனித் தனி வேனில் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக