சென்னை :மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராஜாவைத் திரும்பப் பெறும் எண்ணம் முதல்வர் கருணாநிதிக்கு இல்லை என்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: மத்திய அமைச்சர் ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், "ராஜா இன்னமும் மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவியில் எப்படி செயல்படுகிறார்' என, சுப்ரீம் கோர்ட் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த 2008ம் ஆண்டு அரவிந்த் குப்தா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு சினிமா டிக்கெட் போல் விற்பனை செய்யப்பட்டது என்று கருத்து தெரிவித்த போதே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.டில்லி ஐகோர்ட் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, தொலை தொடர்புத் துறை மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான கோர்ட் அமர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்று தெரிவித்தது.
டில்லி ஐகோர்ட் தனி நீதிபதியின் ஆணையை 2009ம் ஆண்டு டிசம்பரில் உறுதி செய்த போதே, ராஜா தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.ராஜா மீது துரித நடவடிக்கை எடுக்க கூட்டணி தர்மத்தின் கட்டாயம் தடுக்கிறது என பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திரும்பத் திரும்ப சுட்டிக் காட்டி உள்ளனர். எனவே, தற்போது இப்பிரச்னை கடைசியாக முதல்வர் கருணாநிதியின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது.இந்தியாவுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள ராஜாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து திரும்பப் பெற கருணாநிதிக்கு மனம் வரவில்லை.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக