வெள்ளி, 5 நவம்பர், 2010

தலைமை செயலகத்தில் ஆற்காடு வீராசாமியின் அறைக்கு `சீல்' ஏன்?-அரசு விளக்கம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அலுவலக அறை சீல் வைக்கப்படுவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறை சீல் இடப்பட்டது என்று மக்களை குழப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் ஜெயா டி.வியில் செய்தி வெளியிட்டதாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அவரது அறை சீல் இடப்படுவது திடீரென்று இன்று மட்டும் நடைபெற்ற நிகழ்வு அல்ல. அவரது அறை முதல்வரின் அறைக்கு மிக அருகிலேயே இருப்பதால், பாதுகாப்பு காரணத்திற்காக முதல்வர் அறை தினமும் அலுவல் நேரம் முடிந்ததும், சீல் இடப்படுவதைப் போல, அவரது அறையும் சீல் இடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தற்போது மின்துறை அமைச்சரின் அலுவலக அறை அப்போது முதல்வரின் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

அப்போதும் இந்த அறைகள் சீல் இடப்படும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் (புதன்கிழமை) அலுவல் நேரம் முடிந்ததும் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அறை சீல் இடப்பட்டது. நேற்று அவர் வேறு பணியின் காரணமாக அலுவலகத்திற்கு வராததால், அவரது அறை திறக்கப்படவில்லை. இதற்கும் ஒரு காரணம் கற்பித்து, அதைச் செய்தியாக்கி, ஜெயா டி.வி. ஒளிபரப்பியிருப்பது கண்டனத்திற்கு உரியது என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: