வெள்ளி, 5 நவம்பர், 2010

பொய் உரைப்பது ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை: கருணாநிதி

சென்னை: ஒரு கருத்தைச் சொல்லுவதும்; பின் அந்தக் கருத்துக்கு எதிர்மறையான இன்னொரு கருத்தைச் சொல்லுவதும்; அதற்குப்பின் அந்த மாதிரி கருத்தே சொல்லவில்லை என்று மறுத்துப் பொய் உரைப்பதும்; ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை. இதை அவரைப் பற்றி அறிந்திருக்கும் அனைவரும் அறிவர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: காவிரிப் பிரச்சனை பற்றி 2.11.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா; தாங்கள் ஜெயலலிதாவினுடைய அறிக்கையை முழுமையாகப் படிக்கவில்லை என்றும், காவிரி நதி நீர் ஆணையத்தைப் பொறுத்தவரை ஒரே நிலையைத்தான் அவர் கடைப்பிடித்து வருவதாகவும் சொல்லியிருக்கிறாரே?

பதில்: காவிரி நதி நீர் ஆணையம் குறித்து- பல்லில்லாத ஆணையம்; அது தன் கடமையைச் செய்யவில்லை; கர்நாடகத்துக்கு ஆதரவாகவே அது செயல்படுகிறது; அதன்மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை; இந்தப் பிரச்சனையில் பிரதமரின் செயல்பாடு திருப்தியாக இல்லை- என்று சொன்னவர் ஜெயலலிதா.

அப்படிச் சொன்ன ஜெயலலிதா, உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தவுடன்; ''காவிரி ஆணையத்தின் மீது நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்; ஆணையத் தலைவர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்; பிரதமர் மற்றும் காவிரி ஆணையம் பற்றி நான் தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்'' என்று; பிரதமருக்குக் கடிதம் எழுதியவர் ஜெயலலிதா.

ஆனால், 30.10.2010 நாளிட்ட அறிக்கையில் ஜெயலலிதா, ''கர்நாடகத்தில் உள்ள அணைகளின் மதகுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளக்கூடிய அதிகாரத்தை, காவிரி மேலாண்மைக் குழுவுக்கோ அல்லது காவிரி நதிநீர் ஆணையத்துக்கோ வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்தியிருப்பதன் பொருள் என்ன? காவிரி நதி நீர் ஆணையத்தின்மீது ஏதோ தனக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்குத்தானே?.

இவற்றிலிருந்து காவிரி நதி நீர் ஆணையம் குறித்து மாறுபாடான நிலைப்பாட்டை ஜெயலலிதா கொண்டிருந்தார் என்பதை எளிதில் எவரும் புரிந்து கொள்ளலாம்.

ஒரு கருத்தைச் சொல்லுவதும்; பின் அந்தக் கருத்துக்கு எதிர்மறையான இன்னொரு கருத்தைச் சொல்லுவதும்; அதற்குப்பின் அந்த மாதிரி கருத்தே சொல்லவில்லை என்று மறுத்துப் பொய் உரைப்பதும்; ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை. இதை அவரைப் பற்றி அறிந்திருக்கும் அனைவரும் அறிவர். இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் இப்படித்தானே ''பல பல்டிகள்'' அடித்தார்.

ஜெயலலிதா ''பம்மாத்து'' செய்கிறார்:

கேள்வி: காவிரி நதி நீர் ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசைப் பலமுறை வலியுறுத்தியும், அதனை அவர்கள் கண்டுகொள்ளாததால்தான், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றுக் கொண்டது என்று; ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறாரே?.

பதில்: அப்போதைய அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தவர்களுக்கு, ஜெயலலிதா சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பது தெளிவாகத் தெரியும். வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசு அமைந்ததில் இருந்து- இங்கிருந்த கழக ஆட்சியை ''டிஸ்மிஸ்'' செய்ய வேண்டும்- அப்போது மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேவை அமைச்சரவையில் இருந்து விலக்க வேண்டும்- உள்துறை அமைச்சர் அத்வானிக்கு இருந்த முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்திட வேண்டும்- தன் மீதுள்ள ஊழல் வழக்குகளையெல்லாம் திரும்பப் பெறவேண்டும்- போன்ற கோரிக்கைகளை ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்தக் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாத காரணத்தால், ஜெயலலிதா கோபம் கொண்டு, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். 12 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த அரசியல் நிகழ்வுகளையெல்லாம் இப்போது அனைவரும் மறந்திருப்பார்கள் என்று ஜெயலலிதா ''பம்மாத்து'' செய்கிறார்.

அதனால்தான், ''அதிமுகவுடன் கூட்டணி இருந்த காலம்தான், எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலமாகும். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நாளிலிருந்தே ஜெயலலிதா தொல்லை கொடுக்கத் தொடங்கினார். பாஜக அரசைப் பலவீனப்படுத்தக் கூடிய வகையில், ஒவ்வொரு வாரமும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார்'' என்று; அதிர்ச்சி அளித்திடக்கூடிய வகையில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 22.8.1999 அன்று சொன்னதை, இன்னமும் யாரும் மறந்து விடவில்லை.

கேள்வி: கர்நாடக அரசு ஹேமவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று 6.3.1970 அன்று தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் பேசியிருப்ப தாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?.


பதில்: 1974க்கு முன்பே கர்நாடக மாநில அரசினர், 1924ம் ஆண்டு ஒப்பந்தமே, 1974ம் ஆண்டு முடிந்துவிடுகிற ஒப்பந்தம் என்று வாதிடத் தலைப்பட்டு; அதற்கு முன்னதாகவே, 1924ம் ஆண்டு ஒப்பந்தப் பிரிவுகளுக்கு மாறாக, 1966ம் ஆண்டு ஹேமவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர்.

அண்ணா தலைமையில் கழக ஆட்சி அமைந்ததும், இதுகுறித்து தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் கோரியது. 1924ம் ஆண்டு ஒப்பந்தப்படி, புதிய அணைகளைக் கட்ட வேண்டுமென்றால், அதற்குரிய விதிமுறைகளை இரு மாநிலங்களும் ஒத்துக் கொண்ட பின்னர்தான், அணைகளைக் கட்ட வேண்டும். ஆனால், கர்நாடக அரசு தன்னிச்சையாக 1966ல் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அணைகளைக் கட்டத் தொடங்கியது.

இதுகுறித்து மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, அதன் தலைமையில் இரு மாநிலங்களுக்கிடையே 1966-68ல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து கடிதப் போக்குவரத்துகளும் நடந்தன. இவை பயனளிக்காததாலும்; கர்நாடக அரசு அணைகளைக் கட்டுவதில் முனைப்பாக இருந்ததாலும்; 17.2.1970ல் நடுவர்மன்றம் அமைக்கக்கோரி மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதினேன்.

இவை அனைத்தையும் மனதிலே கொண்டு தான்: ''1924ம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்து விட்டு, அதற்குப் பிறகு இரு அரசுகளும் கூடிப் பேசலாம் என்ற அடிப்படையிலேயே பேசி வருகிறார்கள். ஹேமவதி அணைக்கட்டு கட்டுவதில் தமிழக அரசுக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை. ஆனால், அந்த அணை கட்டப்படுகிற நேரத்தில், அதனால் தமிழ்நாட்டினுடைய நிலவளம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகத் தான், 1924ம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஷரத்துகள் மீறப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறோம்.

சில நிபந்தனைகளை வைத்துக்கொண்டு உத்தரவாதம் அளிக்கிறோம். மைசூர் அரசு முன்வந்தால், மைசூர் அரசும், தமிழக அரசும் - மத்திய அரசின் முன்னிலையில் மீண்டும் கூடிப்பேசி இதுபற்றி நல்ல முடிவு காண்பதில் எனக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை'' என்று 6.3.1970 அன்று தமிழக சட்டப் பேரவையிலே நான் பேசியிருக்கிறேன். ஜெயலலிதா கற்பனை செய்வது போல, நான் பேசவில்லை.

காவிரிப் பிரச்சனை பற்றிய வரலாறு அறிந்தவர்களுக்கு, நான் சட்டப்பேரவையில் பேசியதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியும்.

காவிரிப் பிரச்சனை பற்றி இன்றைக்கு அறிக்கை மேல் அறிக்கை வெளியிடும் ஜெயலலிதா, காவிரிப் பிரச்சனை குறித்து அரசோடு எந்த அளவுக்கு ஒத்துழைத்தார் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

1990ம் ஆண்டு கழக ஆட்சியில், அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கை சந்தித்து, நடுவர் மன்றம் தொடர்பாக தமிழகத்தின் எம்.பிக்கள், கோரிக்கை மனு ஒன்றினை அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. அதிமுக எம்.பிக்களும் அந்த மனுவினை அளிக்க சேர்ந்து வருவதாக முதலில் ஒப்புக்கொண்ட போதிலும், கடைசி நேரத்தில் வரமறுத்து, அவர்கள் தனியாகச் சென்று, ஒரு மனுவினைப் பிரதமரிடம் அளித்தார்கள்.

ஆனால், அவர்கள் பிரதமரிடம் அளித்த மனுவின் முதல் வாக்கியமே, கர்நாடகாவின் வாதத்தை வலுப்படுத்துவதைப் போல, 1924ம் ஆண்டின் காவிரி ஒப்பந்தம், 1974ம் ஆண்டோடு முடிந்துவிட்டது என்பதாகும். அதனை ஏடுகளில் படித்துவிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும், பத்திரிகைகளும் அதிமுகவைக் கண்டித்தனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில், காவிரிப் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, அந்தப் பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி கழகம் கலந்து கொண்டது. ஆனால், கழக ஆட்சியில் 1989 ஜுலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டபோது, அதிமுக கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ளாதது மாத்திரமல்ல; கழகத்தைக் கடுமையாக விமர்சித்து, ஜெயலலிதா அறிக்கையும் விடுத்தார்.

அதுபோலவே, 1991 ஜுலையில் அதிமுக அரசு தமிழக எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டியபோது, திமுக எம்.பிக்களுக்கு அழைப்பே அனுப்பவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லசிவன் எம்.பிக்கு முதலில் அழைப்பு அனுப்பிவிட்டு, பிறகு அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்ட அநாகரிகமும் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றது.

கேள்வி: நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையாவது நிறைவேற்றுவதற்கு கழக அரசு தீவிரமாக பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா யோசனை கூறியுள்ளாரே?.

பதில்: நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்துவது பற்றி ஜெயலலிதாவின் ஒப்புதல் வேண்டி 9.6.1992ல் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கடிதம் அனுப்பினார். உடனடியாக பதில் கடிதம் அனுப்புவதைத் தவிர்த்துவிட்டு, மவுனமாக இருந்த ஜெயலலிதா; மத்திய அரசிடமிருந்து வந்த கடிதத்திற்கு 9 மாதங்கள் கழித்துதான் பதில் எழுதினார். அப்படிப்பட்ட ஜெயலலிதா தான் இன்றைக்கு நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை கூற முன்வந்திருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, 205 டி.எம்.சி. தண்ணீரைப் பெறுவதற்கு எந்த அளவுக்கு முயற்சி செய்தார் என்பதை; மேட்டூரில் கிடைத்த நீரின் அளவு பற்றிய புள்ளி விவரங்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2001-2002ல் 162.74 டி.எம்.சி. தண்ணீரும்; 2002-2003ல் 94.87 டி.எம்.சி.; 2003-2004ல் 65.16 டி.எம்.சி.; 2004-2005ல் 163.96 டி.எம்.சி. தண்ணீரும்தான் கிடைத்தது என்பதை மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு, ஜெயலலிதா இப்போது புதிய புத்தர் வேடம் போடுகிறார்.

ஆனால், திமுக ஆட்சியில், மேட்டூரில் கிடைத்த நீரின் அளவு- 2006-2007ல் 235.93 டி.எம்.சி; 2007-2008ல் 346.73 டி.எம்.சி; 2008-2009ல் 204.48 டி.எம்.சி; 2009-2010ல் 219.48 டி.எம்.சி.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: