புதன், 3 நவம்பர், 2010

பள்ளி மாணவனை கடத்தி கோடி ரூபாய் வசூலித்த கும்பல்: சென்னையிலும் பெற்றோர்கள் பீதி!


சென்னை :சென்னையில் மாணவனைக் கடத்திய கும்பல், ஒரு கோடி ரூபாய் கேட்டு பேரத்தில் இறங்கியது. மாணவனை மீட்க போலீசார் நடத்திய, "ஆபரேஷன்' வெற்றிகரமாக முடிந்து, மாணவன் கீர்த்திவாசன் பத்திரமாக மீட்கப்பட்டான். மாணவனை பணம் கொடுத்து மீட்டதாகக் கூறிய சென்னை போலீஸ் கமிஷனர், மாணவனை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரத்தை, ஒரு வாரத்தில் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். எவ்வளவு பணம் கைமாறியது என்ற தகவல் வெளியிடப்பட வில்லை.

கோவை ஜவுளிக்கடை அதிபரின் மகள் முஸ்கன், மகன் ரித்திக் ஆகியோர் பணத்திற்காக கடத்தப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தின் ரணம் ஆறுவதற்கு முன்பே, சென்னையில் அடுத்த பரபரப்பு துவங்கியது.சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கிரானைட் அதிபர் ரமேஷின் மகன் கீர்த்திவாசன்(13) நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து காரில் வீடு திரும்பினான். அப்போது, திடீரென காரில் ஏறிய இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, டிரைவர் கோவிந்தராஜை கீழே தள்ளவிட்டு மாணவனை கடத்திச் சென்றனர்.பள்ளி மாணவன் துணிகரமாக கடத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததும், கடத்தல் கும்பலைப் பிடிக்க முழுவீச்சில் காவல்துறை களமிறங்கியது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம் இரவு கீர்த்திவாசனின் தந்தையை போன் மூலம் தொடர்பு கொண்டு மூன்று கோடி ரூபாய் பணம் கேட்டனர்.இந்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் பயன்படுத்திய மொபைல் போன் எண்களைக் கொண்டு அவர்களைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, நேற்று காலை மாணவனின் தந்தை ரமேஷை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் ஒன்றரைக்கோடி ரூபாய் கொடுத்தால், கீர்த்திவாசனை விடுவிப்பதாகக் கூறினர். கேட்டபணத்தை கொடுத்து விடுவதாக ரமேஷ் தெரிவித்த நிலையில், போலீசாரின் மீட்பு பணியும் முழுவீச்சில் நடந்து வந்தது.கோவை சம்பவம் போல், எவ்வித அசம்பாவித சம்பவமும் நடந்துவிடக் கூடாது; கடத்தப்பட்ட மாணவனை உயிரோடு மீட்க வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையின் மீட்பு முயற்சி அமைந்திருந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையின் ஒப்புதலின் பேரில், கடத்தல்காரர்களுக்கு ஒரு தொகை வழங்கப்பட்டுள்ளது.கடத்தல் சம்பவத்தில் திடீர் திருப்பமாக, நேற்று மதியம் 2.45 மணிக்கு அண்ணாநகரில் காரில் இருந்த சிறுவன் கீர்த்திவாசனை போலீசார் பத்திரமாக மீட்டனர். ஒருவழியாக, மாநிலம் முழுவதும், பெற்றோõர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவன் கீர்த்திவாசன் கடத்தல் சம்பவம், 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

மாணவன் மீட்பு குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, ""அனைத்து காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாணவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். இதற்காக ஒரு சிறிய தொகை கொடுக்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளனர்; விரைவில் அவர்கள் கைதாவார்கள். இந்த, "ஆபரேஷன்' குறித்த விரிவான தகவல்களை ஒரு வாரத்தில் தெரிவிக்கிறேன்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: