புதன், 3 நவம்பர், 2010

ஒபாமா: வைகோ தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்-சிபிஎம்

Vaiko and Obamaமதுரை: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய வருகையை தனிப்பட்ட நபர் என்ற வகையில் இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

அக் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில்,

ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு  தெரிவிப்பதை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்திய வருகையை தனிப்பட்ட நபர் என்ற அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கவில்லை.

அவரது வருகையை எதிர்த்து வரும் 8ம் தேதி இடதுசாரிகள் போராட்டம்  நடத்த உள்ளோம். ஆனால் ஒபாமா உரையாற்றும் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இடதுசாரி எம்.பிக்கள் கலந்து கொள்வார்கள்.

தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் மதிமுக, இடதுசாரி இயக்கங்கள் இணைந்து பங்கேற்று வருகின்றன. இந்தியா வரும் ஒபாமாக தனி நபராக வரவில்லை. அவருடன் 200க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களும் வருகிறார்கள். அவர்களது நோக்கமெல்லாம் இந்தியாவில் சில்லறை வணிகத்தைத் தொடங்குவதுதான். இவற்றைத்தான் இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கிறோம்.

மேலும் போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் உரிய நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆண்டர்சன் அமெரிக்காவில்தான் உள்ளார். அவரை இந்தியாவிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை.

அமெரிக்க அதிபராகவும், அந்நாட்டுக் கொள்கையின் சின்னமாகவும் ஒபாமா இருப்பதைத்தான் எதிர்க்கிறோம்.

அமெரிக்காவின் தனியார்மய கொள்கையை இந்தியாவில் திணிக்க வரும் ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே வைகோ தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் இடதுசாரிகள் முடிவெடுப்போம் என்றார்.

ஒபாமா அதிபராகும் முன் அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தபோது அவரை வைகோ சந்தித்து இலங்கை விவகாரம்  குறித்து விளக்கியது நினைவுகூறத்தக்கது.

கருத்துகள் இல்லை: