டெல்லி: திரைத்துறையிலிருந்து எம்.பிக்களாகி நாடாளுமன்றம் சென்றவர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு சரிவர வருவதில்லை. அதேபோல ஆளுங்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்தவர்களும் கூட பல நாட்கள் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருந்துள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில்தான் பெரும்பாலானவர்கள் முறையாக கூட்டங்களுக்கு வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜுலை மாதம் 26ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடந்து முடிந்தது. இதில் மொத்தம் அவை நடந்த நாட்கள் 29 என்றாலும் 26 நாட்களுக்கு வருகை பதிவேட்டின் விவரங்கள் தெரியவந்துள்ளது.
ஒரு வார்த்தை கூட பேசாத சோனியா-ராகுல்:
இதில் சோனியா 9 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் அவரது தாயாரை பார்க்கச் சென்றிருந்ததால் அவர் பல நாட்கள் அவைக்கு வராமல் இருந்தபோதிலும், வந்திருந்த சில நாட்களிலும் கூட ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதாவது எந்த விவாத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அவரது மகனான ராகுல் காந்தி 11 நாட்கள் வந்திருந்தார். ஆனாலும் அவரும் ஒரு நாள் கூட பேசியதில்லை.
விலைவாசி பிரச்னை, அணு ஒப்பந்த இழப்பீட்டு மசோதா,காஷ்மீர் பிரச்னை, நக்சல்கள் பிரச்னை,காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட நாடு தழுவிய பல முக்கிய பிரச்னைகள் குறித்த விவாதங்கள் அவையில் நடந்தும் கூட இவர்கள் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளனர்.
அத்தனை நாட்களும் வந்த அத்வானி:
தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்றவர்களில் அத்வானி முதலிடத்தில் உள்ளார். அவர் அனைத்து நாட்களும் தவறாமல் வந்துள்ளார்.
யாத்திரை மேற்கொண்டு காங்கிரஸ் மேலிடத்துக்குப் பிரச்னைகளை கொடுப்பதில் பிசியாகஇருந்தபோதிலும், ஜெகன்மோகன்ரெட்டி 15 நாட்கள் அவைக்கு வந்தார்.
தனது திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தும் கூட சசிதரூர் 19 நாட்கள் வருகை தந்தார்.
விலைவாசி உயர்வு, எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்த விவாதம், அணுஇழப்பீட்டு ஒப்பந்த மசோதா,நக்சலைட்டு பிரச்னை, காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பலவற்றிலும் எதிர்க்கட்சி தலைவர்கள் நன்றாக பங்கேற்று பேசினர். முக்கிய விவாதங்களில் பங்கேற்காவிட்டாலும், அத்வானி நிறைய முறை குறுக்கீடு செய்து அவையில் பேசியுள்ளார்.
விலைவாசி பிரச்னை உள்ளிட்ட மூன்று முக்கிய விவாதங்களை காரணமாக வைத்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடந்த வேண்டுமென்று வலியுறுத்தி அவையை ஒரு வாரங்களுக்கு முடக்கும் வகையில் யாதவ தலைவர்களான முலாயமும், லாலுவும், சரத் யாதவும் செயல்பட்டனர்.
கிரிக்கெட் எம்.பிக்கள் பரவாயில்லை:
கிரிக்கெட் வீரர்களாக இருந்து எம்.பியானவர்கள் சற்று பரவாயில்லை. நாடாளுமன்றத்தை விளையாட்டுக் களமாக கருதாமல் பெரும்பாலான நாட்கள் அவைக்கு வந்து போயுள்ளனர்.
கீர்த்தி ஆசாத் 25 நாட்கள் வருகை தந்துள்ளதோடு மட்டுமல்லாது காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குறித்த விவாதத்தில் சிறப்பாக பங்கேற்று பேசினார். அசாருதீனும் 22 நாட்கள் வந்துள்ளார். பா.ஜ.கவைச் சேர்ந்த நவ்ஜோத்சிங் சித்து 14 நாட்கள் வந்துள்ளார்.
சினிமாக்கார எம்.பிக்கள் மோசம்:
சினிமாத் துறையிலிருந்து எம்.பியாகி வந்தவர்கள்தான் மோசம். விரல் விட்டு எண்ணக் கூடிய நாட்களுக்குத்தான் இவர்கள் வந்துள்ளனர்.
தெலுங்கானா புயல் விஜயசாந்தி வெறும் 2 நாட்கள்தான் அவைக்கு வந்துள்ளார். ஜெயப்பிரதா 11 நாட்கள்தான் வந்துள்ளார். ராஜ் பாபர் 15 நாட்கள்தான் வந்தார்.
கூட்டத் தொடரில் பங்கேற்றவர்களில் யார், யார் எத்தனை நாட்கள் வந்தனர் என்ற விவரம்:
அத்வானி - 26
யஷ்வந்த் சின்கா - 25
கீர்த்திஆசாத் - 25
முலாயம்சிங் - 24
லாலுபிரசாத் - 23
தேவகவுடா - 22
அசாருதீன் - 22
முரளிமனோகர் ஜோஷி - 22
ஜஸ்வந்த்சிங் - 21
வருண் - 21
பாசுதேவ்ஆச்சார்யா - 21
மேனகாகாந்தி - 19
சசிதரூர் - 19
சரத்யாதவ் - 17
ஜெகன்மோகன் ரெட்டி - 15
ராஜ்பப்பர் - 15
சித்து - 14
அஜித்சிங் - 13
ராகுல் காந்தி - 11
ஜெயபிரதா - 11
சோனியா காந்தி - 9
சுரேஷ் கல்மாடி - 3
சந்திரசேகரராவ் - 2
விஜயசாந்தி - 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக