ஞாயிறு, 28 நவம்பர், 2010

கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறைபடிந்துள்ளது என்று வெள்ளிக் கிழமையன்று மிகவும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ள உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மை குறித்துக் கேள்வி எழுப்பி கவலை தெரிவித்துள்ளது.
"டென்மார்க நாட்டில் ஏதோ அரசியல் கறைபடிந்துள்ளது" என்று ஷேக்ஸ்பியர் தம்முடைய நாவலான ஹேம்லெட்டில் கூறியுள்ளார். அதுபோல, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறை படிந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது. "அலகாபாத் உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும்" என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்துவதற்காக நீதிபதிகளை இடம் மாற்றப் பரிந்துரை செய்தல் உள்பட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அலகாபத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக மாமா நீதிபதிகள் (uncle judge) போன்று செயலப்படுவதாகவும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் 12 பக்க உத்தரவில் கூறியுள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் பரைச் என்ற ஊரில் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தை, ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதத்தில் நடைபெறும் சர்கஸ் காட்சி நடத்துவதற்கு ஒதுக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் மேற்கண்டவாறு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளனர்.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் ஏற்றுக்கொள்ளத் தகாத தீர்ப்புகளால் நாட்டு மக்களின் நம்பிக்கை ஆட்டப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கட்ஜு மற்றும் மிஷ்ரா ஆகியோர் கூறியுள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சில நீதிபதிகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன என்பதை நாங்கள் வருத்தத்துடன் கூறிக் கொள்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் சில நீதிபதிகளின் உறவினர்கள் வழக்கறிஞர்களாக அதே நீதிமன்றத்தில் வழக்காடுகின்றனர். தங்கள் பணியைத் தொடங்கிய சில காலங்களுக்குள்ளே நீதிபதிகளின் உறவினர்கள் கோடீசுவரர்களாக மாறிவிடுகின்றனர். மிகப்பெரும் வங்கி இருப்புகள், சொகுசு கார்கள், மிகப்பெரும் வீடுகள் என சொசுகு வாழ்க்கையை வாழ்கின்றனர் என்றும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

நீதிபதிகளை உறவினர்களாகக் கொண்ட அனைத்து வழக்கறிஞர்களுமே தங்கள் உறவை தவறானவற்றிற்காகப் பயன்படுத்துகிறார்கள் என நாங்கள் கூறவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மிகக்கடுமையான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அலகாபாத் மற்றும் லக்னோ கிளைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அமர்வு நீதிபதிகள் தங்கள் கூட்டு உத்தரவில் கூறியுள்ளனர்.

62 ஆண்டு கால பாபர் மசூதி - இராம ஜென்ம பூமி  வழக்கிலும் இதே அலஹாபாத் நீதிமன்றம் தான்  அண்மையில் தீர்ப்பளித்திருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: