காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி தனது சுற்றுப் பயணத்தின் போது திடீர் என்று ஏழைகளின் வீடுகளுக்கு சென்று சாப்பிடுவது, அவர்களது குறைகளை கேட்பது என வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் பாதுகாப்பு வளையத்தை மீறி கோரக்பூரில் இருந்து மும்பைக்கு 36 மணி நேரம் ரெயிலில் பயணம் மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்களில் இருந்து மும்பைக்கு வேலை தேடி செல்பவர்களின் இன்னல்களை நேரடியாக அறிந்து கொள்வதற்காக அவர் ரெயில் பயணிகளிடம் சகஜமாக உரையாடினார்.
அவரது இதுபோன்ற முன்னறிவிப்பில்லாத பயணங்களால் பாதுகாப்பு அளிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும் என்று அதிரடிப்படையினருக்கு உத்தரபிரதேச போலீஸ் எச்சரித்தது.
இந்த நிலையில் பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த ராகுல்காந்தி ஜகனாபாத் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக காரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திடீர் என்று காரை நிறுத்தி பொதுக் கூட்டம் நடைபெறும் பிரதான நுழைவு வாயில் அருகே இருந்த தெருவோர வியாபாரியின் குடிசை வீட்டுக்குள் ராகுல்காந்தி நுழைந்தார்.
அவருடன் பாதுகாப்புக்கு வந்த அதிரடிப்படையினர் திகைத்துப் போய் விட்டனர். ராகுல் வருகையை சற்றும் எதிர்பார்க்காத தெருவோர வியாபாரி குடும்பத்தினர் வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தனர். ராகுலை அவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.
சிறுமி உள்பட அங்கு இருந்தவர்களிடம் ராகுல் காந்தி கைகுலுக்கி மகிழ்ந்தார். அவர்களது குறைகளை கேட்டு விடைபெற்றார்.
பின்னர் மேடை ஏறி பேசிய ராகுல்காந்தி தான் குடிசைக்கு சென்றதை குறிப்பிட்டார்.
நான் குடிசைக்கு சென்று மக்கள் குறை கேட்பதை எதிர்க்கட்சிகள் கேலி செய்கின்றனர். என்னை பச்சா (குழந்தை) என்று அழைக்கின்றனர். ஆனால் நான் குழந்தை அல்ல என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக