சனி, 27 நவம்பர், 2010

வாக்குப்பதிவு எந்திரம்: அதிமுக கோரிக்கை-ஆணையம் பரிசீலனை

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக அதிமுக விடுத்த கோரிக்கையை தொழில் வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு செய்யும் முறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் தாங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோமோ அந்த கட்சிக்குத் தான் அந்த வாக்கு சென்றிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை வாக்காளர்கள் மத்தியில் நிலவுகிறது.

மேலும், மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடியோ அல்லது மாற்றமோ செய்யப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் பொது மக்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் எழும்போது மோசடி நடந்திருக்கிறதா, இல்லையா என்பதை நிரூபிக்க எந்த வழிவகையும் இல்லை.

எனவே, மின்னணு வாக்கு எந்திரங்கள் நம்பகத்தன்மையற்றவை என்பதால் தான் பெரும்பான்மையான முன்னேறிய நாடுகள் இந்த முறையை கைவிட்டுவிட்டன என்பதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சுட்டிக்காட்டி, மீண்டும் வாக்குச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மின்னணு வாக்கு எந்திரங்களில் செலுத்தும் வாக்குகளை சரிபார்க்கும் அளவிற்கு அச்சிடப்பட்ட தகவலை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்கும் வகையில், தேர்தல் ஆணையம் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்தையும் கோரியது.

இந்தச் சூழ்நிலையில், அதிமுகவின் கருத்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், அதிமுகவின் கருத்தினை தொழில் வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: