சனி, 5 மார்ச், 2011

பொருளாதார வளர்ச்சியில் அடுத்த 3 ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்தும் : மத்திய அரசு

அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை இந்தியா முந்தும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தொழில் துறை சூழ்நிலைகள் குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பாசு கூறியதாவது: பொருளாதார வளர்ச்சி உயர்வில் சீனாவுக்கு இணையாக நாம் இப்போது இருக்கிறோம். இது அடுத்த ஓரிரண்டு ஆண்டுகள் நீடிக்கலாம். பிறகு, 3 அல்லது 4வது ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை இந்தியா முந்திச் செல்லும்.

அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இந்த நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதமாக இருக்கும். அது அடுத்த நிதி ஆண்டில் (2011&12) 9.25 சதவீதமாக அதிகரிக்கும். 2010ம் ஆண்டில் கடைசி 3 மாதங்களில் வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது. அதே காலத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 9.8 சதவீதம். பொருளாதார வளர்ச்சியில் சீனாவை அடுத்த சில ஆண்டுகளில் நம்நாடு முந்தினாலும், தனிநபர் வருமான அடிப்படையில் சீனாவை நெருங்க நீண்ட காலம் பிடிக்கும். ஏனெனில், இந்தியாவின் தனிநபர் வருமானத்தைவிட இப்போது சீன தனிநபர் வருமானம் 3 மடங்கு அதிகம். இவ்வாறு கவுசிக் பாசு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: