செவ்வாய், 1 மார்ச், 2011

பத்தாயிரம் குடும்பங்களுக்கு கிடைத்தது பட்டா; தேர்தலில் மாறுமா ஓட்டு?

கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறையின் முயற்சியால், கடந்த நான்கரை ஆண்டுகளில், 9,857 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன; இவை ஆளும்கட்சிக்கு சாதகமாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறை கேட்பு முகாம்களில் வரும் மனுக்களில் 25 சதவீத மனுக்கள், இலவச வீட்டு மனைப்பட்டா கோருவதாகவே இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டால், 20 ஆயிரத்தைத் தாண்டும். எந்த நம்பிக்கையில், இவர்கள் மனுக் கொடுக்க வருகிறார்கள் என்று எல்லோருக்குமே சந்தேகம் கிளம்பும்.

ஆனால், இந்த சந்தேகத்துக்கு விடை சொல்கிறது வருவாய்த்துறை தரும் புள்ளி விபரம். ஏனெனில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 9,857 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கி சாதனை படைத்துள்ளது கோவை மாவட்ட வருவாய்த்துறை. திருப்பூர் மாவட்டத்தில் தற்போதுள்ள பழைய கோவை மாவட்டப் பகுதிகளில் தரப்பட்ட வீட்டு மனைப்பட்டாக்கள் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

தொகுதி வாரியாகக் கணக்கிடுகையில், பொள்ளாச்சி தொகுதியில்தான் அதிகபட்சமாக 2,670 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் தரப்பட்டுள்ளன. அந்த நிலத்தின் மதிப்பு, 98 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய். புதிதாக உருவாகியுள்ள சூலூர் தொகுதியில் 1,484 பேருக்கு 55 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டு, பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையத்தில் 1,338, கவுண்டம்பாளையத்தில் 1,059, கிணத்துக்கடவில் 825, வால்பாறையில் 767, கோவை வடக்கில் 694, தொண்டாமுத்தூரில் 467, சிங்காநல்லூரில் 288, கோவை தெற்கு தொகுதியில் 265 பேர் என 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 9,857 பேருக்கு 3 கோடியே 48 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிலம் வழங்கப்பட்டு, வீட்டு மனைப்பட்டாவும் தரப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், பட்டா பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே ஓரிடத்தில் குடியிருந்து, அந்த இடத்துக்கு பட்டா கிடைக்காமலிருந்தவர்கள் என்பதுதான். உதாரணமாக, வடவள்ளி பகுதியில் 1943லிருந்து புறம்போக்கு இடத்தில் குடியிருந்த 50 குடும்பங்களுக்கு கடந்த ஆண்டில்தான் பட்டா வழங்கப்பட்டுள்ளது. சூலூர் விரளிக்காடு என்ற பகுதியில் 1965லிருந்து குடியிருந்தவர்களுக்கு இப்போதுதான் பட்டா கிடைத்துள்ளது.

கோவையில் கடந்த 1998ல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது, 220 குடும்பங்களுக்கு செட்டிபாளையத்தில் இடம் ஒதுக்கப்பட்டது; பட்டா கொடுத்தும் அவர்கள் அங்கே போகவில்லை. அங்கே குடியிருந்தவர்களுக்கோ பட்டா இல்லை. பழைய பட்டாவை 2008ல் ரத்து செய்து, தற்போது குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுத்து, நீண்ட கால பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

நீர் நிலை புறம்போக்குகளை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கு மாற்று இடம் தருவதற்காகவும் இந்த அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. கோவை மாநகராட்சிப் பகுதிக்குள், பல்வேறு குளங்களில் குடியிருக்கும் 3,840 குடும்பங்களுக்கு உக்கடம் மற்றும் அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் கட்டி முடியும் தறுவாயில் உள்ளன; சூலூரில் 1,403 வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டால், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், சூலூர் சின்ன ஏரி, பெரிய ஏரி, ராஜ வாய்க்கால், எம்.ஜி.ஆர்., நகர் (ஓடைப்பகுதி) என பல்வேறு நீர் நிலை புறம்போக்குகளில் உள்ளவர்களையும் அங்கிருந்து வெளியேற்றி, அவற்றை முழுமையாக மீட்க முடியும். இந்த அரசின் சாதனைகளில் ஒன்றாக இதை நிச்சயம் பதிவு செய்யலாம்.

இவை மட்டுமின்றி, நீலம்பூர், பச்சினாம்பதி, மத்வராயபுரம் பகுதியிலுள்ள பல குடும்பங்களுக்காகவும், சூலூர் விமானப்படை விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களுக்காகவும் புதிதாக நிலங்களை கையகப்படுத்தும் பணியையும் மாவட்ட நிர்வாகம் வெற்றிகரமாக முடித்துள்ளது. தென்கரை, மாச்சநாயக்கன் பாளையத்தில் 3 ஏக்கர் 20 சென்ட் இடங்களை கையகப்படுத்தியது, ஓர் உதாரணம்.

ஒட்டுமொத்தமாக, கோவை மாவட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், சமத்துவபுரம் என பல்வேறு திட்டங்களில், 16 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிலம் மற்றும் வீடுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்துமே ஓட்டுக்களாக மாறும் என்பது ஆளும்கட்சியினர் நம்பிக்கை. அது உண்மையானால், ஆளும்கட்சியினர் முதலில் நன்றி சொல்ல வேண்டியது வருவாய்த்துறைக்குதான்.

கருத்துகள் இல்லை: