செவ்வாய், 1 மார்ச், 2011

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது மிகவும் சிரமம்! சொல்வது, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்

கோவை : ""கடந்த 2006க்கு முன் வரை தேர்தல் நடத்த சிரமமான மாநிலங்களின் பட்டியலில் பீகார், உத்திரபிரதேச மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 2006க்கு பின் இந்த பட்டியலில் பீகார், உத்தரபிரதேச மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது,'' என, இந்திய முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி தெரிவித்தார்.

பாரதியார் பல்கலை சமூகபணித்துறை சார்பில் "கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், கலந்துரையாடலும், "தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயகத்தில் இளைஞர்கள் பங்கு' என்பது குறித்த நிகழ்ச்சியும், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார்.

இந்திய முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது: சிறந்த ஆட்சியாளர்களை தேர்வு செய்ய மக்கள் அனைவரும் சிந்தித்து ஓட்டு போட வேண்டும். 2006க்கு முன் வரை நாட்டில் தேர்தல் நடத்த மிகவும் சிரமமான பகுதிகளின் பட்டியலில் பீகார், உத்திரபிரதேச மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 2006க்கு பின் இந்த பட்டியலில் பீகார், உத்தரபிரதேச மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதல் இடம் பெற்று விட்டது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கும் மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமையை பணத்துக்காக விற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் பணம் கொடுத்தவன் ஆளுவான். வாக்காளர்களிடம் கொடுத்த பணத்தை விட, பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்டு செயல்படுவான்.

தேர்தலில் நல்ல பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்காவிட்டால் எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் மிகவும் கஷ்டப்படவேண்டும். தேர்தலின் போது அனைத்து ஓட்டுசாவடிகளிலும் கேமரா பொருத்தி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனி கணக்கு துவக்கப்பட்டு 3 நாட்களுக்கு ஒரு முறை செலவு கணக்குகளை தேர்தல் அதகாரியிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 16லட்சம் ரூபாய் செலவு செய்யலாம்.

தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள சட்டŒபை தேர்தலில் தணிக்கை அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டு,ஒவ்வொரு தொகுதிகளிலும் பார்வையிடுவார்கள். நல்ல பிரதிநிதியை தேர்வு செய்தல், பணத்துக்காக ஓட்டு உரிமையை விற்காமல் இருத்தல், தேர்தலின் போது நடக்கும் விதிமுறை மீறல்கள் குறித்து உடனடியாக தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட மூன்றும் ஒவ்வொரு குடிமகன்களின் தலையாய கடமையாகும்.

தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திரத்தை பயன்படுத்துவதால் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பு இல்லை. போலீஸ் வாக்கி டாக்கி என்பது ஒருபுற தொலைதொடர்பு கருவி, ஒரு தகவல் மற்றவருக்கு கொடுத்தால் மறுமுனையில் உள்ளவர் "ஓவர்' என்ற சொன்ன பின்பே அவரின் பதிலை தெரிவிக்க முடியும். மொபைல்போன்கள் இருபுற தொலைதொடர்பு சாதனம்.

இதில் இருவரும் தங்களின் கருத்துக்களை ஒரே சமயத்தில் தெரிவிக்க முடியும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒருபுற தொலைதொடர்பு சாதனம். ஆகவே இது பாதுகாப்பானது. எவ்வித முறைகேடும் செய்ய முடியாது. எந்த புதிய கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தாலும் அதுகுறித்து சந்தேகப்படுவது மனிதர்களின் இயல்பு. ஆகவே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் தவறு நடக்க வாய்ப்பு உள்ளதாக பிறர் கூறும் வதந்திகளை நம்பக்கூடாது. இவ்வாறு, கோபால்சாமி பேசினார்.

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா பேசுகையில் ""சட்டŒபை தேர்தலையொட்டி கடந்த மாதம் 10தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டால் படிவம் 001சி தாக்கல் செய்து, 15 ரூபாய் கட்டணம் செலுத்தி புதிய அடையாள அட்டையை பெறலாம். நல்ல மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என்றார். தொடர்ந்து மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். முன்னாள் ஐ.ஏ.ஏஸ்., அதிகாரி தேவசகாயம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: