செவ்வாய், 1 மார்ச், 2011

கிரிக்கெட் சூதாட்டம் : கோடிகள் புழக்கத்தால் தெருக்கோடியில் குடும்பங்கள்

உலக கோப்பை கிரிக்கெட், "சூதாட்டம்' ஊட்டியில் மறைமுகமாக நடந்து வருகிறது; இந்தியா - இங்கிலாந்து போட்டி, "டையில்' முடிந்ததால், பணம் கட்டியவர்கள் மத்தியில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே, பல்வேறு போட்டிகளுக்கும், "சூதாட்டம்' நடத்தப்படும் முக்கிய இடமாக, நீலகிரி மாவட்டம் உள்ளது. இங்கு கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர் பகுதிகளில், தெரிந்தும், தெரியாமலும், பல இடங்களில், பல விதமாக சூதாட்டங்கள் நடந்து வருகின்றன. இவை இன்றளவும் தொடர்கின்றன.ஊட்டியில் அரசின் அனுமதி பெறப்பட்டு குதிரை பந்தயம் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு, "கிளப்'கள், நூற்றாண்டுகளை கடந்தும், இன்றும் தொடர்கின்றன. அதே வேளையில், எவ்வித அனுமதியும் இல்லாமல், விளையாட்டு, தேர்தல், அரசியல் கட்சி கூட்டணி தொடர்பாக, "தற்காலிக' சூதாட்டங்கள், மாவட்டத்தின் பல இடங்களில் நடக்கின்றன.இதில், "பணம் படைத்தவர்கள்' அதிகம் ஈடுபட்டாலும், சில நடுத்தர வர்க்கத்தினரும் அடிக்கடி சிக்கி, தங்கள் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றனர்.

தற்போது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கியதில் இருந்து, ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அணிக்கு தகுந்தாற் போல், "விலை' நிர்ணயம் செய்து, "சங்கேத எஸ்.எம்.எஸ்.,' அடிப்படையில், இந்த சூதாட்டம். "சூடாக' நடந்து வருகிறது.இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் விளையாடும் போது, அதிகளவில் பணம் புழங்குகிறது. நேற்று முன்தினம், இந்தியா - இங்கிலாந்து விளையாடிய போட்டிகளில், இந்தியாவுக்கு ஆதரவாக, பல போட்டியாளர்கள் விளையாடியுள்ளனர். சிலர் இங்கிலாந்துக்கு ஆதரவாக விளையாடி உள்ளனர். அதனால், இங்கிலாந்துக்கு விளையாடியவர்கள் வென்றால் பெரிய தொகை கிடைக்க வாய்ப்பிருந்தது.கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் பரபரப்பாக்கிய அந்த போட்டி, சூதாட்டக்காரர்களுக்கும் ரத்தக் கொதிப்பை அதிகரிக்க செய்தது. ஒருவர் கூட, "டை' ஆகும் என எதிர்பார்க்கவில்லை.

ஆனால், "டையில்' ஆட்டம் முடிந்ததால் அனைவரும், "அப்செட்' ஆகினர். இந்தியாவுக்கு ஆதரவாக பணம் கட்டியவர்கள் ஆறுதல் அடைந்தனர். ஒரு பெரிய தொகை, கைக்கு வரும் என எதிர்பார்த்த இங்கிலாந்து ஆதரவாளர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இந்த ஆடுகளத்தை நடத்தும் முக்கிய நபர்கள் எவ்வாறு இந்த தொகையை பிரித்து கொடுப்பது என்பது தெரியாமல் குழப்பமடைந்தனர். பலர் தாங்கள் கட்டிய தொகை கிடைத்தால் போதுமென வாபஸ் வாங்கி சென்றனர். பலர் அடுத்த முறை இந்தியா விளையாடும் ஆட்டத்துக்கு, அதே தொகையை வைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனால், இனி வரும் போட்டிகளில், சூதாட்ட தொகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பல வீரர்கள் கோடிகளை அள்ள உள்ள நிலையில், நீலகிரியில் பல குடும்பங்கள், "தெருக்கோடிக்கு' போகும் நிலை உள்ளது. .

கருத்துகள் இல்லை: