செவ்வாய், 1 மார்ச், 2011

தாய் கழகத்தின் மூலம் காங்கிரசுக்கு தி.மு.க., மிரட்டல்: கூட்டணியில் அதிகரிக்கும் நெருக்கடி

சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், காங்கிரஸ் காட்டும் கெடுபிடியால் தி.மு.க., எரிச்சலடைந்துள்ளது. "கூட்டணியை தொடர வேண்டுமா' என்று, தங்களது தாய் கழகத்தின் மூலம் மிரட்டல் அறிக்கை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து, டில்லியில் சோனியாவுடன் நடத்திய பேச்சு சாதகமாக அமையாத நிலையில், தி.மு.க., தலைமை அதிர்ச்சியானது. தொடர்ந்து, தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் தங்கபாலு, சிதம்பரம், வாசன், ஜெயந்திநடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்ற போது, தி.மு.க., தரப்பு நிம்மதியடைந்தது. கடந்த நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.,விற்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகின்றனர். இளங்கோவன், கார்த்திசிதம்பரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தவிர தங்கபாலு, சிதம்பரம், வாசன் உள்ளிட்ட தலைவர்கள் தி.மு.க., ஆதரவு போக்கையே கடைபிடித்து வந்துள்ளனர்.அதனால், தி.மு.க.,வின் தரப்பை டில்லி தலைமைக்கு ஐவர் குழு உணர்த்தி, சுமுகமான முடிவுக்கு அழைத்துச் செல்லும் என்று, தி.மு.க., நம்பியது. ஆனால், ஐவர் குழுவினருடனான பேச்சுவார்த்தை இதற்கு எதிர்மறையாக சென்றது, தி.மு.க.,விற்கு கசப்பை ஏற்படுத்தியது. தி.மு.க.,விற்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த தலைவர்கள், குரலை உயர்த்தி கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வைத்ததால், தி.மு.க., எரிச்சலடைந்துள்ளது.

இதுவரை இரு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில், காங்கிரஸ் தனது நிலையில் இருந்து இறங்கி வருவதாய்த் தெரியவில்லை. பேச்சுவார்த்தையின் போது மட்டுமல்லாமல், வெளியிடங்களில் நிகழ்ச்சிகளில் பேசும்போது, தி.மு.க., எதிர்ப்பு கருத்துக்களை காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படுத்தி வருவது, கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசும்போது, " காங்கிரஸ் பட்ட மரம் அல்ல; பசுமையான மரம். இதிலிருந்து ஒரு இலை விழுந்தால், இரு இலை துளிர்க்கும்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே போல், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காஞ்சிபுரத்தில் மற்றொரு நிகழ்ச்சியில் பேசும்போது, " ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசாக, காங்கிரஸ் அரசு திகழ்கிறது. காங்கிரஸ் யாருக்கும் தலை வணங்காது; அன்புக்கு அடிபணிவோம்; அதிகாரத்திற்கு தலைவணங்க மாட்டோம்; சோனியா, ராகுலை மதிப்பவர்களை மதிப்போம்; எதிர்ப்பவர்களை எதிர்ப்போம்' என்று ஆவேசமாக பேசினார். தி.மு.க., ஆதரவு தலைவராக அறியப்பட்ட தங்கபாலு போன்றவர்கள் இது போன்று எச்சரிக்கை வார்த்தைகளை விடுத்து பேசுவதை தி.மு.க., தலைமை ரசிக்கவில்லை. இருப்பினும், உடனடி பதிலடி கொடுத்தால், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நிரந்தரமாக சிக்கல் வந்துவிடும் என்ற அச்சம் தி.மு.க.,விடம் ஏற்பட்டுள்ளது.இதனால், தனது தாய் கழகமான திராவிடர் கழகம் மூலமாக காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் முயற்சியில், தி.மு.க., இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

திராவிடர் கழக தலைவர் வீரமணி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேற வேண்டும் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: கூட்டணி என்ற ஒன்றைக் காட்டி, தசரதனிடம் கைகேயி வரம் பெற்றதாக, ராமாயணக் காதையில் வரும் நிகழ்வைப் போல, தோழமை உணர்வு காட்ட வேண்டிய சில கட்சிகள், தோள் மீது சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்து விட்டது போல், கற்பனைக் குதிரையில் சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு தி.மு.க., இணங்க வேண்டிய, இறங்க வேண்டிய அவசியம் இல்லை.

தி.மு.க., தேர்தல் கால நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல; அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில் நீந்தி வந்த, ஒரு ஜனநாயக பீனிக்ஸ் பறவை. குட்டக் குட்ட குனியும் போக்குக்கு தி.மு.க., ஆட்பட்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, நிரந்தர சுமை தாங்கியாக ஆகாமல், சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும். நட்பு பேசிக்கொண்டே, கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு, களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல."நான் உமி கொண்டு வருவேன்; நீ நெல் கொண்டு வா; குத்திய பின் ஊதி, ஊதி தின்போம்' என்ற போக்கு நியாயமாகுமா? 1980ல் இப்படி விட்டுக் கொடுத்து கெட்டுப் போன பழைய வரலாறு திரும்ப வேண்டாம். எனவே, தி.மு.க., சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார். வீரமணியின் இந்த அறிக்கை தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: