வியாழன், 3 மார்ச், 2011

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு : கபில் சிபல் யோசனை


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் அதன் பயன்பாடு குறித்து கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கூறினார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பொறுத்தவரை, போதுமான அளவிற்கோ, திறமையாகவோ ஒதுக்கப்பட வில்லை. இந்த விவகாரத்தில் எந்தவிதமான கொள்கைகளும் கடைபிடிக்கப்படவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் விற்பனை ஆகியவற்றில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

கடந்த 2000ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் கிடைக்கும் ஸ்பெக்ட்ரம் மற்றும் எத்தனை நிறுவனங்களுக்கு அவை ஒதுக்கப்பட்டன என்ற விவரங்களை மத்திய தொலைத்தொடர்பு துறையிடம் சி.ஏ.ஜி., கேட்டுள்ளதை வரவேற்கிறோம். இது தொடர்பாக, தொலைத்தொடர்பு துறையும் ஆய்வு நடத்தி வருகிறது. மத்திய அரசை பொறுத்தவரை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தேவைப்படுவதை வழங்க தயாராக இருக்கும் அதே நேரத்தில், எதையும் இலவசமாக தரும் நிலையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொறுத்தவரை, ஒருவர் மீது ஒருவர் அவதூறாக பேசுவதை விடுத்து, மக்களுக்காக ஒன்றாக பணியாற்ற முன்வர வேண்டும். ஸ்பெக்ட்ரமை ஏன் பகிர்ந்து கொள்ளக் கூடாது? இது முழுக்க முழுக்க இணைந்து பணியாற்றுவதை பொறுத்தது. பெரிய நிறுவனங்களை போல், வர்த்தக ரீதியிலான போட்டி அல்ல இது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

கருத்துகள் இல்லை: