கெய்ரோ, மார்ச் 6: லிபிய அதிபரின் கோட்டையாகக் கருதப்படும் தலைநகர் திரிபோலியில் அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை கடும் மோதல் நடந்ததாக பிபிசி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. திரிபோலியில் காலை 9.15 மணியில் இருந்து விண் அதிரும் வகையில் துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்டது. கடாஃபியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டைதான் இது என்று திரிபோலி மக்கள் கூறினர். ஆனால் இதை அரசு தரப்புத் தொலைக்காட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. எதிர்ப்பாளர்கள் வசம் இருந்த முக்கிய நகரங்களை கடாஃபியின் படை கைப்பற்றிவிட்டது. இதைத்தான் திரிபோலியில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதாகவும் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. திரிபோலிக்கு 50 கி.மீ. தொலைவிலுள்ள அஸ்-ஸôவியா நகரம் இப்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இந் நகரை கடாஃபியின் ராணுவம் மீட்டுவிட்டதாகவும் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. ஆனால் இது பொய்ப்பிரசாரம் என்று அந்நகரவாசிகள் உறுதிபடுத்தியுள்ளனர். நாட்டின் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் உள்ள நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசமே உள்ளன. இப்பகுதிகளை கடாஃபி ஆதரவாளர்கள் மீண்டும் கைப்பற்றுவதென்பது எளிதான காரியமல்ல. கிளர்ச்சியாளர்கள் கை தொடர்ந்து ஓங்கி வருகின்றது என்று மக்கள் தரப்பில் கூறப்படுவதாக அல்-ஜஸீரா தொலைக்காட்சி கூறுகிறது. கடந்த 18 நாள்களாக கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வருகிறது. பதவியைவிட்டு விலகக் கோரி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அவருக்கு தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருகின்றன. இருப்பினும் பதவி விலக முடியாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். "உங்களால் முடிந்ததை செய்யுங்கள்' என்று அந்நாடுகளுக்கு சவால்விடுக்கிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பது: லிபியாவில் என்ன நடக்கிறது என்பதை நிச்சயம் உலக மக்கள் அறிந்தே ஆக வேண்டும். இதனால் லிபியாவுக்கு தனிக் குழுவை ஐ.நா.வோ, ஆப்பிரிக்க யூனியனோ அனுப்பி வைக்கலாம். இதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. லிபியாவில் அக்குழு சுதந்திரமாக விசாரணை நடத்தலாம். அக்குழுவுக்கு எவ்வித இடையூறும் வராது என்று உறுதியளிக்கிறேன். விசாரணைக் குழு லிபியாவுக்கு வந்தால் உண்மை தெரியவரும். அதன் மூலம் என் தலைமையிலான அரசின் மீது உலக மக்கள் கொண்டிருக்கும் தவறான அபிப்ராயம் நிச்சயம் மாறும். லிபியாவில் இப்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சி மக்கள் புரட்சியல்ல என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அல்-காய்தா தீவிரவாதி பின்லேடன்தான் கிளர்ச்சியை தூண்டிவிடுகிறார். இக்கிளர்ச்சியை நான் அடக்காவிட்டால் ஒட்டுமொத்த லிபிய மக்களும் அவருக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும். இதுபோன்ற மோசமான நிலையை நீங்கள் சந்திக்க வேண்டுமா? யோசியுங்கள்... இந்த கிளர்ச்சி லிபியாவுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த உலக நாடுகளுக்குமானப் பிரச்னை. இதை கட்டுப்படுத்தத் தவறிவிட்டால் ஐரோப்பிய கண்டத்துக்கு பேராபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார் கடாஃபி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக