சென்னை, மார்ச் 6: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலைகளால் அதிமுக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், ம.தி.மு.க. ஆகியவை தங்களது நிலைமை என்ன என்று தெரியாத பரிதவிப்பில் சிக்கியுள்ளன. திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், ஏனைய கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிமுக தலைமை தாமதிப்பதால் காங்கிரஸ் அணிக்காக அதிமுகவில் இடங்கள் ஒதுக்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.வுடனான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு இடங்களும் ஒதுக்கப்படுவது வரையில் இடதுசாரிகள், ம.தி.மு.க.வுடனான பேச்சு வார்த்தை தாமதம் ஆனது. தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கையும் விரைவில் முடிவாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவது என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவரையில் இடதுசாரிகள், மதிமுகவினருடன் அதிமுக குழுவினர் பேசி வந்தனர். திமுக அணியில் காங்கிரஸ் இல்லை என்று தெரிந்தவுடன் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என சொல்லப்படுகிறது. இந்தக் கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை முடிவாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தைக்காக மூன்று கட்சிகளின் தலைவர்களும் இரவு 9 மணி வரையில் காத்திருந்தனர். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து எந்தத் தகவலும் வராததால் இந்தத் தலைவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 140 தொகுதிகளிலாவது அதிமுக போட்டியிடுவது வழக்கம். இந்த முறை தேமுதிகவுக்கு 41 இடங்களை ஒதுக்கிவிட்ட நிலையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய மூன்று பழைய கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிமுக தலைமை எப்படி திருப்திகரமாக இடங்களைப் பகிர்ந்தளிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது. திமுகவுடன் இனி சமரசம் பேசப் போவதில்லை என காங்கிரஸ் தரப்பில் வெளியாகியிருக்கும் தகவல், ஒருவேளை அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா என்ற சந்தேகத்தை இடதுசாரிகள் மற்றும் மதிமுகவுக்கு எழுப்பி இருக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சியை அதிமுக சேர்த்துக் கொண்டால் இடதுசாரிகள் நிச்சயமாக அந்த அணியில் இருந்து வெளியேறியாக வேண்டிய நிலை ஏற்படும். மதிமுகவைப் பொருத்தவரை காங்கிரஸ் வருவதால் பெரிய பாதிப்பு இருக்காது என்றாலும், தொகுதிகள் எண்ணிக்கையில் பிரச்னை வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுக அணியிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சியும் அதிமுக அணியில் இடம் பெறுவது எப்படி சாத்தியம்? ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருக்கும் மூன்று கட்சிகளும் இல்லாமல் இருந்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான தொகுதிகளை அதிமுகவால் ஒதுக்க முடியும். இதுதான் இந்த மூன்று கட்சிகளுக்கும் கலக்கம் ஏற்பட்டிருப்பதற்கான காரணம் ஆகும். அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம் என கூறினார். இடதுசாரிகள் வருமா என கேட்டதற்கு, ஓரிரு நாள்களில் தெரியும் என்று கூறினார். இதுபற்றி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்களில் ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது, திமுக அணியில் இடதுசாரிகள் இடம் பெறுவதற்கான சாத்தியமே கிடையாது என்று உறுதியாகக் கூறினார். "இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுகளைப் பிரச்னையாக்கியதே இடதுசாரிக் கட்சிகள்தான். நாங்கள் எப்படி திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள முடியும்?' என்று பதில் கேள்வி எழுப்பினார் அவர். இதற்கிடையில், தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட இருப்பதாகக் காங்கிரஸ் தலைவரின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஒரு தேசியத் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்திருப்பது, அதிமுக கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுகவுக்கு சற்று ஆறுதலை அளிக்கக் கூடும். இதற்கெல்லாம் திங்கள்கிழமை மாலைக்குள் முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக