செவ்வாய், 8 மார்ச், 2011

அவசரப்பட வேண்டாமே!

மும்பையில் கடந்த 37 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் அருணா செண்பக்கின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவருவதால் அவரைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.  கருணைக் கொலையை அனுமதிக்கும் சட்ட விதிமுறைகள் இந்தியாவில் இல்லை என்பதால், நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. என்றாலும் இந்த வழக்கில் இந்தியாவிலேயே முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்பு என்னவெனில், இத்தகைய நோயாளிகள் சாத்வீகமான முறையில் இறந்துபோக மருத்துவர்கள் அனுமதிக்கலாம் என்பதுதான்.  சாத்வீகமான முறையில் இறப்பது என்பது, அத்தகைய நோயாளிகள் சார்ந்திருக்க வேண்டிய மருத்துவக் கருவிகள் அல்லது மாத்திரைகளை நிறுத்தி விடுவதுதான். டயாலிசஸ் செய்தாக வேண்டும் என்கிற நோயாளிக்கு அதைச் செய்யாமல் நிறுத்திவிட்டால் அவர் தானாகவே மெல்ல இறந்துபோவார்.  இத்தகைய சாத்வீக கருணைக்கொலைக்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா என்றால் இல்லை. ஆனால், இது சட்டத்துக்கு முரணானதா என்றால் அதுவும் இல்லை. ஆகவே, இத்தகைய அணுகுமுறையைக் கையாளுவதற்கு அனுமதித்துள்ள நீதிமன்றம், இத்தகைய சாத்வீக கருணைக்கொலைக்கு மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்றும் ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளது.  உயிர்வாழ்தல் சுமையாகிப்போன ஒன்று என்பதை ஒரு நோயாளியோ அவரது நெருங்கிய உறவினர்களோ தீர்மானிக்க முடியும் என்கிற நிலைமை மாறி அந்தப் பொறுப்பை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயம் இதை நீதிமன்றமும் கண்காணிக்கச் செய்திருப்பது சட்டப்படி இதில் ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்களை மனதில் கருதியே என்பது வெளிப்படை.  1973-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, மருத்துவமனை ஊழியரால் பலாத்காரம் செய்யப்பட்டு, நாய்ச் சங்கிலியால் கழுத்து நெரிக்கப்பட்டு கோமா நிலையில் கிடந்த செவிலி அருணா செண்பக்கை கடந்த 37 ஆண்டுகளாக பாதுகாத்து, மருத்துவம் அளித்து வரும் கெம் மருத்துவமனையின் மனிதாபிமானமும் அந்த ஊழியர்களின் அக்கறையும் நீதிமன்றத்தால் பாராட்டப்பட்டிருக்கிறது. இது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாகக் கருதி அந்த மருத்துவமனை ஊழியர்கள் இந்தத் தீர்ப்பை பரஸ்பரம் இனிப்பு கொடுத்துக் கொண்டாடியுள்ளனர்.  இவர்கள் சிறப்பாகவே அருணாவை கவனித்துகொண்டாலும்கூட, இன்று அந்த பெண்மணி, சுயமாக எதையும் செய்துகொள்ள முடியாமலும் உணர்வு இல்லாமலும் கிடக்கும் இன்றைய சூழ்நிலையில், சாத்வீக கருணைக்கொலைக்கான மனுவை மருத்துவர்கள் நீதிமன்றத்திடம் அளித்து, அருணா தனக்கான மருத்துவம், உணவு எதுவும் இல்லாமல் அவராகவே இறந்துபோகச் செய்ய அனுமதிக்க வேண்டும்.  உலக நாடுகளில் கருணைக்கொலை தேவைதானா என்பது விவாதத்துக்குரியதாகத் தொடர்கிறது. கருணைக்கொலை என்பது பல நேரங்களில் சொத்துக்காகவும் அல்லது சுயநலத்துக்காகவும் ஒருவரைக் கொன்றுவிடப் பயன்படும் பயங்கர ஆயுதமாக மாறிவிடக்கூடும் என்பதுதான் இதற்கான எதிர்ப்புக்கு அடிப்படைக் காரணம்.  இதில் உண்மை இல்லாமல் இல்லை. கருணைக்கொலை அனுமதிக்கப்பட்டால், பல குடும்பங்களில் பெற்றோரையே விஷஊசி போட்டு, சட்டப்படி கருணைக்கொலை செய்யும் பிள்ளைகள் நிறைய பேர் உருவாகிவிடுவார்கள். மாறிவிட்ட சமூகச் சூழலில், பெருகிவரும் முதியோர் இல்லங்களும், அசுர வேகத்தில் அதிகரித்துவரும் விவாகரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்ற நிலையில் "கருணைக்கொலை' என்பதேகூட சட்டத்தின் போர்வையில் கொலை செய்ய வழிவகுத்துவிடக் கூடும்.  தற்போதைய வழக்கிலும்கூட, அருணா செண்பக் தனக்கான மனுவை சுயநினைவுடன் கருணைக்கொலைக்கான மனுவைச் சமர்பிக்கவில்லை. அவர் வாழ்வதைவிட சாவதே மேல் என்று கருதிய அவருடைய சினேகிதி அளித்த மனுதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும், ஒரு நபர், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் என்னைக் கொன்றுவிடுங்கள் என்று முன்னதாகவே பதிவு செய்துகொள்ளும் உரிமை தன்விருப்பக் கருணைக்கொலை பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அதாவது, ஒருநபர் வெறிநாய்க்கடியால் அல்லது எய்ட்ஸôல் பாதிக்கப்பட்டு யாரும் நெருங்கவும் முடியாமல் புறக்கணிக்கப்படும் சூழல் தனக்கு நேரும் என்றால் என்னைக் கொன்றுவிடுங்கள் என்று முன்னதாகவே விருப்பத்தைப் பதிவு செய்வதுதான் தன் விருப்பக் கருணைக் கொலை.  பெல்ஜியம், லக்ஸம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்காவில் ஓரிகான். வாஷிங்டன் மாகாணங்களில் இதற்கான சட்டங்கள் இருக்கின்றன. அத்தகைய நடைமுறையை இந்தியாவிலும் சட்டமாக்க வேண்டுமா என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எழுப்பி இருக்கும் கேள்வி.  கூட்டுக் குடும்பக் காலத்திலிருந்து, இப்போதைய தனிக்குடித்தனக் காலம்வரை, இந்தியாவில் இருந்து வந்திருக்கும் பரஸ்பர சகிப்புத்தன்மையும், சமூக வாழ்வியல் முறைகளும் கடந்த பத்து ஆண்டுகளாகத் தகர்ந்து கொண்டிருக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பக் கலாசாரம் மூலம் உருவாகி இருக்கும் பாலியல் உறவுகள், முக்கியமாகக் குடும்ப அளவிலும், தாம்பத்திய நிலையிலும் சகிப்புத்தன்மையே இல்லாத வாழ்க்கை முறைக்கு வழிகோலியிருக்கிறது. இந்த நிலையில், கருணைக்கொலை சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டால் அதை முறையாகப் பயன்படுத்துவோரைவிட, தவறாகப் பயன்படுத்திக் கொலைப்பழியிலிருந்து தப்ப முனைபவர்கள்தான் அதிகமாக இருக்கக்கூடும்.  முறையான மருத்துவ வசதியே இல்லாமல் மடியும் லட்சக்கணக்கான ஏழைகள் இன்னும் இருக்கும் நாட்டில், மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயல்வதை விட்டுவிட்டு, கருணையின் பெயரால் கொலையை அனுமதிக்கச் சட்ட அங்கீகாரம் தேடுவது அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. நடந்திருப்பது கொலையா, கருû ணக் கொலையா என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்கு முறையான கண்காணிப்பு எப்போது உறுதிப்படுத்தப்படுகிறதோ, அப்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பிரச்னை இது.  அருணா செண்பக்கின் பிரச்னையில் தீர்ப்பு ஏற்புடையது. "கருணைக்கொலை' சட்டமாக்கப்பட வேண்டுமா என்றால் "அவசரப்பட வேண்டாமே" என்று உள்மனது எச்சரிக்கிறது! 

கருத்துகள் இல்லை: