வியாழன், 3 மார்ச், 2011

பிரசாரம்-ஊர்வலம் வீடியோ படமாக எடுக்கப்படும்: தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடு; வேட்பாளர்கள் குடும்ப சொத்து கணக்கை காட்ட வேண்டும்

தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தேர்தல் கட்டுப்பாடு பற்றி அவர் கூறியதாவது:-
 
* கோவில், மசூதி, ஆலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.
 
* ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.
 
* பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசார சுற்றுப்பயணங்கள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும்.
 
 * பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது. தனியார் இடங்களில் சுவர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் விளம்பரம் செய்யவேண்டும்.
 
* விளம்பர செலவுகள் அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
 
 * அரசியல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேனர்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்கான செலவுகள் கணக்கிடப்பட்டு வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.
 
* தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் கார், வேன், பஸ் ஆகியவற்றின் வாடகை எவ்வளவு என்பதை கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து அந்த தொகை தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.
 
* தேர்தலில் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படும். இதில் ஒரு துணை தாசில்தார், ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார். இவர்கள் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் 4 அல்லது 5 சோதனை மையம் அமைக்கப்படும். இந்த மையங்கள் அடிக்கடி இடமாற்றப்படும்.
 
* ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி உதவி இயக்குனர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வேட்பாளருக்கு வரும் பணம் ஆய்வு செய்யப்படும்.
 
* வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும்போது 3 வாகனங்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் அலுவலகம் அருகே 100 மீட்டர் வரை அனுமதிக்கப்படும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு செல்லலாம். அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
 
* தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சொத்து விவரம், வழக்கு விவரம் ஆகிய 2 வகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்கள் விவரங்களை மொத்தமாக குறிப்பிடாமல் தனித்தனியாக குறிப்பிடவேண்டும். அந்த சொத்து யாரிடம் வாங்கியது? அது என்ன சொத்து? வாங்கிய போது மதிப்பு என்ன? இப்போது மதிப்பு என்ன? அதில் முதலீடு செய்த தொகை என்ன? போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதுதவிர அவரது குடும்பத்தில் உள்ள வாரிசு தாரர்கள் சொத்து கணக்கு காட்டவேண்டும்.
 
* கல்யாண மண்டபங்கள் கண்காணிக்கப்படும். அதில் என்ன விழா நடக்கிறது? எதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது? என்பது பற்றி கண்காணிக்கப்படும்.
 
* மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். இது செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
தமிழக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
தேர்தல் அறிவிக்கப்பட்ட 1.3.2011 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துவிட்டன. இதன்படி புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியிடப்படக்கூடாது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படாத புதிய திட்டங்களையும் தொடங்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், 1959-ல் கூறப்பட்டுள்ள விதிகள் அனைத்தும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
 
இந்த விதிகள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க தேர்தல் பொதுப்பார்வையாளரும் மற்றும் தேர்தல் செலவீன கணக்குகளை கண்காணிக்க ஒரு செலவீன பார்வையாளர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்படுவார்கள். வேட்பாளர்களின் செலவீனங்களை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு செலவீன பார்வையாளரின் கீழ் ஒரு உதவி செலவீன பார்வையாளர் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் நியமனம் செய்யப்படுவார்கள்.
 
மேலும், ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதியிலும் வீடியோ கண்காணிப்புக்குழு எடுக்கப்பட்ட படங்களை கண்காணிக்கும் குழு மற்றும் கணக்குக்குழு ஆகியவை நியமனம் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு காவல் நிலைய ஆளுமை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்கவும், தடுக்கவும் பறக்கும்படை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
 
ஒவ்வொரு பறக்கும்படையின் கீழும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழு அமைக்கப்பட்டு அவைகள் சோதனைச் சாவடிகளாக ஆங்காங்கே செயல்படும். தேர்தல் செலவினங்கள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இணைய தளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.   தலைமைத் தேர்தல் அலுவர் அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கால் சென்டர் 24 மணி நேரமும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை செயல்பட உள்ளன.
 
வாக்காளர்கள் கட்டணமின்றி 1965 என்ற எண்ணினைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்புக்குழுக்கள் தலைமைத் தேர்தல் அலுவல கத்திலும் மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் செயல்பட உள்ளன. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கு மேற்படி குழுக்களின் சான்று கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.
 
இந்தக் குழு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்கு கட்டணம் செலுத்தி தேர்தல் விளம்பரங்கள் மற்றும் செய்திகளை வெளியிடுகின்றனரா? என்பதைக் கூர்ந்து கவனித்து விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யும்.   மேலும், போட்டியிடும் வேட்பாளர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நாள் முதல் தேர்தல் தொடர்பான கணக்குகளை உரிய பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
 
தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் குறிப்பிடும் 3 நாட்களில் தனது தேர்தல் கணக்குகளை ஆய்வுக்கு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு 30 நாட்களுக்குள் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் கணக்குகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.
 
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: