கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வரவேண்டும் என்று திருமாவளவன் கூறினார். கடந்த 2006 சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு, மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டன. அதன் பிறகு இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டன. தற்போது சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து சந்திக்கின்றன.
இதற்கிடையே மத்திய மந்திரிசபையில் இருந்து தி.மு.க. விலகுவதாக முடிவு செய்திருப்பதால் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தி.மு.க. கூட்டணிக்கு திரும்பி வரவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
மத்திய மந்திரிசபையில் இருந்து தி.மு.க. விலகி இருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தி.மு.க.வின் பலம் பல மடங்கு அதிகரிக்கும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டாலும், வேறு அணியில் சேர்ந்து போட்டியிட்டாலும் அது தி.மு.க. அணியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்தாது. காங்கிரஸ் இல்லாததால் தி.மு.க.வுக்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். தி.மு.க. அணியில் காங்கிரஸ் இடம் பெற்றதால் தான் இடதுசாரி கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு சென்றன.
இப்போது காங்கிரஸ் இல்லாததால் தி.மு.க. அணிக்கு இடதுசாரி கட்சிகள் வருவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. எனவே அவர்கள் தி.மு.க. அணிக்கு திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். காங்கிரஸ் இல்லாததால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமா என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை. அதற்கான நேரமும் இதுவல்ல.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக